நம் அனைவருக்கும் நம் தாய் என்றால் மிகுந்த பாசம் இருக்கும். நம் நாட்டில் தாய்மைக்கு என்று தனி மரியாதையே உள்ளது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மறைந்த தன் தாயாருக்கு கோவில் கட்டி உள்ளார் மகன் ஒருவர். தற்பொழுது இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மறைந்த தன்னுடைய தாய்க்கு ஒரு கோடி ரூபாய் செலவில் கோயில் கட்டி 560 கிலோ ஐம்பொன் சிலையில் தனது தாயின் திரு உருவத்தை பதித்து மகன் கும்பாபிஷேகம் செய்துள்ளார். பெற்றோரை சுமையாக கருதி முதியோர் இல்லத்துக்கு அனுப்பி வைக்கும் இதே காலகட்டத்தில் தான் தன் தாயார் மறைந்த நினைவில் தன் தாயாருக்கு கோவில் கட்டியுள்ளார் இந்த மகன். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வெளியாரி கிராமத்தை சார்ந்த தம்பதி கருப்பையா -முத்து காளியம்மாள். இவர்களுக்கு சண்முகநாதன், சரவணன், சந்தோஷ் குமார் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். கருப்பையாவின் வருமானம் போதாத நிலையில் முத்துக்காளியம்மாள் பால், துடைப்பம் மற்றும் தாலியை அடகு வைத்தும் தனது மூன்று மகன்களையும் பட்டதாரிகள் ஆக்கி படிக்க வைத்தார்.
தற்பொழுது 3 பேரும் தொழிலதிபராய் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2001 ஆம் ஆண்டு உடல் நல குறைவையின் காரணமாய் 63 வது வயதில் முத்துக்காளியம்மாள் உயிரிழந்துள்ளார். தாயின் மீதான பாசத்தால் அவருக்கு கோயில் கட்ட மகன்கள் முடிவு செய்தனர். கட்டிடக்கலை நிபுணர்கள் மூலம் ஒரு கோடி ரூபாய் செலவில் கோவில்லையும் கட்டியுள்ளனர். மேலும் கோயிலில் கோபுரத்தில் தங்க கலசம் வைத்து முத்துக்காளியம்மாளுக்கு 560 கிலோ எடையுள்ள 5 அடி உயர ஐம்பொன் சிலையை பிரதிஷ்டை செய்துள்ளனர். நான்கு கால யாகசாலை பூஜை நடத்தி இன்று கும்பாபிஷேகம் சிறப்பாய் நடந்தது. இதனை தொடர்ந்து முத்துகாளியம்மாள் வளர்த்த வீரன் என்ற மஞ்சுவிரட்டு காளை கோயில் முன்பு நிறுத்தப்பட்டு ஆசி வழங்கப்பட்டது.
இது குறித்து சண்முகநாதன், சரவணன், சந்தோஷ் குமார் ஆகியோர் கூறியது “விவசாய குடும்பத்தில் பிறந்த எங்களை இரவு பகல் பாராமல் கூலி வேலை செய்து எங்கள் தாய் எங்களை கல்லூரியில் படிக்க வைத்து பட்டதாரி ஆக்கி உள்ளார். நாங்கள் இப்பொழுது நல்ல நிலைக்கு வந்துள்ளோம். ஆனால் அவர்கள் எங்களை விட்டு பிரிந்து சென்று விட்டார்கள். அவரின் தியாகத்தை எங்களது தலைமுறைக்கான புரிந்து கொள்ள வேண்டும் எனவே நாங்கள் இந்த கோயிலை கட்டி உள்ளோம். எங்கள் தாயார் 20-க்கும் மேற்பட்ட மாடுகளை வளர்த்து வந்தார் நாங்கள் வசதியானாலும் எங்களது தாயாரின் நினைவுகளாக மாடுகளை வேலையாட்கள் மூலமாகவது பராமரித்து வருவோம்”, என்று அவர் கூறியுள்ளார்.