
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கனமழை:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இயல்புக்கு மாறாக பெய்து வரும் கனமழையின் காரணத்தினால் கடந்த சில நாட்களாக நீலகிரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று முதல் அடுத்த ஏழு நாட்களுக்கு நகரின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
மேலும், சென்னையை பொறுத்த வரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல் இன்று தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் எச்சரித்திருக்கிறது. மேலும், தமிழக கடலோர பகுதிகளில் அதிக அளவில் சூறாவளிக்காற்று வீசும் என்பதனால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.