
தமிழகத்தில் நேற்றைய தினம் ஒரு சில மாவட்டங்களில் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. தற்போது மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (செப்டம்பர் 26) ஒரு சில இடங்களில் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து அடுத்து வரும் அக்டோபர் 2ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வெப்பநிலை குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆகவும் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.