தமிழகத்தில் கத்திரி வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்ட பகுதிகளிலும் லேசான மழை பெய்து வருகிறது. இந்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, வீடு, சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்கிய நிலையில் இருக்கிறது. மேலும் தேங்காய் மட்டை, சிரட்டை, பிளாஸ்டிக் பாட்டில்களில் நல்ல தண்ணீர் தேங்கி இருப்பதால் ஏடிஸ் எஜிப்டே கொசுக்களின் உற்பத்தி அதிக அளவில் பெருக்கமடைந்து டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழ்நாடு, கேரளா எல்லையான தேனி, கோவை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருவதன் காரணமாக காய்ச்சல் பரவ தொடங்கியதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அணுகவும், தேங்காய் சிரட்டை, உடைந்த பானைகள் போன்றவற்றில் நீர் தேங்காமல் பாதுகாக்கவும் அறிவித்துள்ளது.