தமிழகத்தில் இயங்கி வரும் பள்ளிகளில் சத்துணவு திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாள் தினத்தன்று மத்திய உணவுடன் இனிப்பு பொங்கல் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்காக ஆகும் கூடுதல் செலவினை 4 கோடியே 27 லட்சத்தி 19 ஆயிரத்து 530 ரூபாய் தொகையை 2024- 2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்தின் நோக்கம் பொருளாதாரத்தில் நலிவடைந்த குழந்தைகளுக்கு சத்தான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை கிடைத்திட வகை செய்வதே ஆகும். ஊட்டச்சத்து குறைபாடு உள்ள பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருட்களை வழங்குவதன் மூலம் கல்வியின் தரத்தை மேம்படுத்துதல், பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களின் கல்வி இடைநிறுத்தம் செய்வது தடுத்தல் ஆகியவை செய்யப்படுகின்றது.
தற்போது இது மேலும் மேம்படுத்தப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கவும் தற்பொழுது உள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. மேலும் இந்த சத்துணவு திட்டத்தை பொறுத்தவரை திட்டத்தில் உள்ள அனைத்து வேலை வாய்ப்புகளுக்கும் பெண்களுக்கு மட்டுமே வழங்குவதன் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை தமிழக அரசு முன்னிலைப்படுத்தி உள்ளது.