
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகில் உள்ள குண்டடம் காற்றின் வேகத்தில் மின் கம்பங்கள் முறிந்து விழுந்ததால் அப்பகுதியில் மின் வினியோகம்பாதிக் கப்பட்டது.
விசை மிகுந்த காற்றால் விபரீதம் அதிகம். கடந்த சில நாட்களாக ஆடிக்காற்று அகோர தாண்டவம் ஆடிவருகிறது. இதில் வலுவிழந்த மரங்கள் வளைந்து கொடுக்க முடியாமல் முறிந்து விடுகிறது.
தற்போது குண்டடம் பகுதியில் ஆடிக்காற்று உச்சமடைந்து வீசுவதால் ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்தும், மரங்கள் சாய்ந்தும் விழுந்து வருகின்றன. அதிலும் கடந்த சில நாட்களாக. காற்றின் வேகம் அதிகரித்து உள்ளதால் குண்டடம் தெற்கு மின்வாரிய அலுவலகத்துக்கு உட்பட்ட சிங்காரிபாளையம் தம்பாக்கவுண்டன்தோட்டம் என்ற இடத்தில் விவசாய கிணறுகளுக்கு அமைக்கப்பட்டிருந்த 3 மின் கம்பங்கள் முறிந்து விழுந்தது.
இதனால் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது. உடனடியாக சம்பந்தப்பட்ட மின் வாரிய ஊழியர்கள் மின்மாற்றியை ஆப் செய்தனர். தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் மாற்றுக்கம்பங்களை நடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது பற்றி அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, இந்த கம்பங்கள் கடந்த 1967-ம் ஆண்டு நடப்பட்டது. கம்பத்தின் கான்க்ரீட்டுக்குள் தரமான பெரிய கம்பிகள் இருந்த போதிலும், இந்த பகுதி தண்ணீர் உவர்ப்புதன்மை உடையது என்பதால் கம்பத்தின் கான்க்ரீட் மற்றும் அதனுள் இருக்கும் கம்பிகள் துருப்பிடித்து முறிந்து போனதால் காற்றின் வேகத்துக்கு விழுந்து விட்டது.
எனவே இந்த பகுதியில் அந்த கால கட்டத்தில் நடப்பட்ட மின் கம்பங்களை மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து பழுதடைந்த கம்பங்களை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.