சென்னையில் இன்று காலை முதல் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் திடீரென மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள புறநகர் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது.
குறிப்பாக சென்னையின் முக்கிய பகுதியான சென்ரல் ரயில் நிலையம், எழும்பூர், ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. மேலும் நுங்கம்பாக்கம், கீழ்பாக்கம், தியாகராஜ நகர், அண்ணா நகர், முகப்பேர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, மீனம்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் கன மழை பெய்துள்ளது.
இதேபோல் சென்னையில் புறநகர் பகுதியாக தாம்பரம், வண்டலூர், மதுரவாயல், திருவேற்காடு ஆகிய பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்துள்ளது, மேலும் பூவிருந்தமல்லி, அம்பத்தூர், ஆவடி ஆகிய பகுதிகளிலும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது.
இந்த கனமழையின் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது, வாகன ஓட்டிகள் இதனால் கடும் அவதிக்கு உள்ளாகினர். ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வருகின்ற ஒன்பதாம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.