கள்ளக்குறிச்சி கள்ள சாராயம் மரணத்தை தொடர்ந்து தமிழகத்தில் பூரண மதுவிலக்கை ஆதரித்து விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பாக பெரியார் பிறந்த நாளில் மிகப்பெரிய அளவில் மகளிர் மாநாடு நடத்த உள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தை கட்சிகளின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியது “கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பது நாடு முழுவதுமே உள்ளது. அதற்கு ஒரே தீர்வு பூரண மதுவிலக்கு மட்டுமே. தேசிய அளவில் இந்த மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும். டாஸ்மார்க் மதுக்கடைகளால் பாதிப்பு உள்ளது.கள்ளசாரயம் விற்பனை செய்தவர்களை கண்டுபிடித்து தமிழக அரசு உடனடியாக அவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்.
தற்பொழுது சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டுள்ள மதுவிலக்கு சட்ட திருத்த மசோதா நல்லது தான். ஆனால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்பது இதற்கு தீர்வாக அமையும். கள்ளுக்கடைகள் திறப்பதன் மூலம் கள்ள சாராய சாவுகள் தடுக்கப்படுமா என்றால் அது கேள்விக்குறிதான். மகாத்மா காந்தியடிகள் கள் உட்பட எந்த மதுவும் வேண்டாம் என்றுதான் கூறியுள்ளார். எனவே தமிழக அரசு படிப்படியாக டாஸ்மார்க் கடைகளை மூட வேண்டும்.
கள்ளக்குறிச்சியில் நான் நேரில் சென்று பார்த்தபோது அங்குள்ள மக்கள் டாஸ்மார்க் கடைகளை மூட வேண்டும் என்று தான் கோரிக்கை வைத்தனர். எனவே தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் டாஸ்மார்க் கடைகளை மூடினால் மக்களிடம் இந்த ஆட்சிக்கு நல்ல பெயர் ஏற்படும். கள் விற்பனை டாஸ்மார்க் மூலம் மது விற்பனை உட்பட எந்த மதுவும் தமிழகத்திற்கு தேவையில்லை. பூரண மதுவிலக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த பூரணமது விலக்கை ஆதரித்து விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாளில் மிகப்பெரிய மகளிர் மாநாடு ஒன்று நடத்த உள்ளது”, என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழக சட்டப்பேரவையில் தமிழகத்தில் தற்போதைய நிலைமைக்கு பூரண மதுவிலக்கு வாய்ப்பில்லை என்று அமைச்சர்கள் தெரிவித்துள்ள நிலையில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் தொடர்ந்து டாஸ்மார்க் கடைகளை மூடி பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என கூறியிருப்பதுதமிழக அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.