
திருச்சி அருகே அரசு பேருந்தை மறைத்து பள்ளி மாணவர்கள் போராட்டம் – நடந்தது என்ன.
திருச்சி மாவட்டம் மையம்பட்டி அருகே குமாரவாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஆனாங்கரைப்பட்டி பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதிக்கு பேருந்துகள் இயக்கப்படாததால், அப்பகுதி மக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.
அதிலும் குறிப்பாக பள்ளி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் என்று அனைவரும் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறியும் பல நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவ, மாணவிகள் திடீரென அரசு பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி பேருந்துகள் இயக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததையடுத்து மாணவ, மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.