
திருமணத்திற்கு பின் மகன் மாறிவிடுவது ஏன்?
இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
1 மனைவியின் மீது வரும் அதீத அன்பு.
தனக்கென்று ஒருத்தி கிடைத்துவிட்டாள் இனி வேறென்ன என்று ஆண்கள் நினைப்பது. மேலும் முதன்முதலில் தன் எல்லாவித தேவைகளும் பூர்த்தியாவதால் வருகிற பிணைப்பு. இதனால் சிறு சிறு சண்டைகளில் கூட பெற்றோரை விட்டு மனைவி பக்கம் நிற்பது.
இதில் தவறு மகன் மீது.
2 பெற்றோரின் குணங்களில் ஏற்படும் மாறுதல்.
பொதுவாக தன்னிடம் மட்டுமே பாசமாய் இருந்த, சுகதுக்கங்களைப் பகிர்ந்த நம் மகன். திடிரென்று இன்னொருத்தியிடம் அக்கறை காட்டுகிறானே என்று நினைக்கும் பெற்றோர்களும் இங்கே அதிகம் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த எண்ணம் நாளடைவில் இருவர்மீதுமோ அல்லது அந்தப் பெண்ணின் மீதோ வெறுப்பாக மாறுகிறது. பிறகு அதை மகனும் உணரத்தொடங்கும் போது மகனும் மனைவி பக்கம் சாய்ந்துவிடுகிறார்.
இதில் தவறு பெற்றோரின் மீது.
ஆனால் இவ்விரண்டுமே உளவியல் சிக்கல்தான்.
கூட்டுக்குடும்ப முறை மறைந்த பிறகுதான் இந்த சிக்கல் அதிகரித்துள்ளது என்பது என் எண்ணம்.
மேலும் மகனுக்கு மனைவி மீது வரும் அக்கறை என்பது இயற்கையானதென்பதை இங்கே பெற்றோர்களும் உணர்வதில்லை. பொண்டாட்டி பின்னால சுத்துறான் என்று இளக்காரம் செய்வது. திருமணமான எல்லா ஆண்களும் இந்த நிலையில் இருந்ததே இல்லையா? அப்பாக்கள் முன்பு கணவனாக இருந்ததே இல்லையா? பின்பு இவர்கள்மேல் மட்டும் ஏன் இப்படி குறைபட வேண்டும். இதைப் புரிந்துகொண்டாலே இச்சிக்கல் எழாது.
இதில் இருவருக்கும் பொதுவான மரியாதைமிக்க சிலர். நன்கு புரியும்படி நல்லபடியாக பேசினாலே இப்பிரச்சினை சற்று மட்டுப்படும். ஆனால் அந்த பக்குவமுள்ள மனிதர்களும் தற்காலத்தில் அருகிவருவது இச்சமூகத்தின் சாபக்கேடு.