துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு பதவி உயர்வா?.. உயர் நீதிமன்றம் அதிருப்தி..!!

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல் துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை நடத்தியது. பின்னர் அதன் புலனாய்வு பிரிவு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

இதை எதிர்த்து மதுரையை சேர்ந்த வழக்கறிஞரும், மனித உரிமை ஆர்வலருமான ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் தனது புகாரின் அடிப்படையில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ஹென்றி திபேன், “துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையமும், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையமும் பரிந்துரைத்துள்ளது. ஆனால், அந்த பரிந்துரை ஏற்கவில்லை. மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை” என்பதை சுட்டிக்காட்டி வாதிட்டார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், “தானாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்தது நியாமானது தானா? இழப்பீடு வழங்க உத்தரவிட்டதுடன் தேசிய மனித உரிமை ஆணையத்தின் பணி முடிவடைந்து விடவில்லை. சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் கண்டு, இழப்பீட்டை அவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும். மனித உரிமை ஆணைய உத்தரவுக்கு எதிராக உத்தரவு பிறப்பிப்பதாக இருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரப்பையும் கேட்க வேண்டும்” என்றனர்.

அதே போல் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல் துறை அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் என்று பலரையும் நீதிபதி ஜெகதீசன் ஆணையம் குற்றம்சாட்டியிருக்கிறது. இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், பதவி உயர்வு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பட்டியலை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அப்போது, அரசுத் தரப்பில், தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் ஆஜராகி, சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகளின் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு எடுத்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அதிகாரிகள் தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. எனவே, அந்த அதிகாரிகளையும் எதிர்மனுதாரர்களாக சேர்த்து கூடுதல் மனு தாக்கல் செய்ய ஹென்றி திபேனுக்கு உத்தரவிட்டனர்.

Read Previous

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை..!! முன்னாள் சிறப்பு டிஜிபி மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்..!!

Read Next

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் திடீர் ராஜினாமா.!! காரணம் என்னவோ?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular