
தமிழ்நாட்டில் இன்று கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்றிரவில் இருந்து விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்துள்ளது. சென்னை எம்.ஆர்.சி நகர், சாந்தோம், மந்தைவெளி, சேப்பாக்கம், அண்ணா சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகபட்ச கனமழை பெய்துள்ளது. முக்கியமாக சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் சுமார் 9 செ.மீ வரை மழை பதிவாகி இருக்கிறது. இதனால் சென்னையில் உள்ள பல பகுதிகளில் மழைநீர் தேங்கி போக்கு வரத்து நெரிசல் உருவாகியுள்ளது. இந்த கனமழை அடுத்த 1 மணி நேரம் தொடரும் என தகவல் வெளியாகியுள்ளது.
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பொழியும் என்று சென்னை வானிலை அறிக்கை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் தொடர்ந்து 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் விடுத்துள்ளது.