
இந்தியாவில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்றுதான் தோசை. நம்மில் பலருக்கும் பிடித்த உணவு என்றால் அது தோசைதான்.இந்த தோசை கர்நாடகாவில் உள்ள உடுப்பி நகரத்தில் முதன் முதலாவதாக உருவானது. நீர்த்தோசை, மசாலா தோசை என்று பலதரப்பட்ட வகையில் தோசைகளை அறிமுகப் படுத்தியது கர்நாடகாதான்.
தோசை சரியான முறையில் சுட அதன் மாவு பக்குவத்தில் இருக்க வேண்டும்.தோசை சரியாக வராததற்கு தண்ணீர் பதம் சரியாக இல்லாததும் ஒரு காரணம்.அதாவது நீங்கள் தோசை சுடுவதாக இருந்தால் அதிகமாக தண்ணீர் ஊற்றக்கூடாது. அவ்வாறு ஊற்றினால் தோசை கல்லில் ஒட்டிக்கொள்ளும். எனவே சற்று கெட்டியாக இருக்க வேண்டும்.
பொதுவாக அனைவரும் செய்யும் தவறு என்னவென்றால், ஃப்ரிட்ஜில் வைத்திருந்த மாவை நேரடியாக அப்படியே அடுத்து தோசை சுடுவார்கள். இது தவறான பழக்கம்.
தோசை சுடப்போகிறீர்கள் எனில் மாவை 15 அல்லது 20 நிமிடங்களுக்கு முன்பாகவே எடுத்து வெளியே வைத்து விடுங்கள்.இவ்வாறு செய்தால் மாவு சுடும்போது நன்றாக வரும். அதேசமயம் கல்லிலும் ஒட்டாது.
தோசைக்கல்லை அதிகம் தேய்க்கக் கூடாது, தோசைக்கல்லை அடிக்கடி தேய்த்தாலும் தோசை வராது. தோசை சுட்ட பின் அதை காட்டன் துணியால் துடைத்து தட்டுபோட்டு மூடி வையுங்கள்.வாரம் ஒரு முறை தேய்த்தால் போதும். அதுவும் சோப்பு ஆயிலை கையில் ஊற்றி தேயுங்கள். ஸ்கிரப் கொண்டு தேய்த்தால் கீரல் விழுந்து தோசை வராமல் போக காரணமாகிவிடும்.
துலக்கிய பின் தோசைக்கல் ஈரம் காய்ந்ததும் ஒரு துளி எண்ணெய் ஊற்றி தடவி வையுங்கள். கல்லில் எண்ணெய் தன்மை இருக்க வேண்டும். அப்போதுதான் தோசை நன்கு வரும்.தோசைக்கு மாவு அரைக்கும்போது கொஞ்சம் பெருங்காயத்தை சேர்த்துக் கொண்டால் தோசை கமகம வென்று மணமாக இருக்கும்.