
நகைச்சுவை, கிண்டல், கேலி எல்லாம் நிறைந்ததுதான் வாழ்க்கை. நகைச்சுவை இல்லாவிட்டால் வாழ்க்கை இனிக்காது. மனதை சாந்தமாக்குவது, உற்சாகத்தை ஏற்படுத்துவது, தினசரி செய்யும் வேலைகளை சுறுசுறுப்பாக செய்ய வைப்பது அனைத்திற்கும் அச்சாணியாக இருப்பது நகைச்சுவையே.
இன்று 96 வயது நிரம்பிய எனது சித்தப்பா பெண் பார்க்கச் சென்றிருக்கிறார். அப்பொழுதெல்லாம் ஹேர் டை கிடையாது. ஆண்களோ பெண்களோ அதிகமாக அழகு படுத்திக்கொள்ள மாட்டார்கள். அதற்கான வசதிகளும் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆசையும் அவர்களுக்கு அப்பொழுது இருந்ததில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக எப்படி அழகுபடுத்திக்கொள்வது என்பதும் தெரியாது.
ஆதலால் இளநரை தலை முழுக்க வெளுத்து இருக்க பெண் பார்க்க சென்றவரை பார்த்த பெண்ணின் அக்கா தங்கை அனைவரும் ஒன்றாக சேர்ந்து என்ன குருமூர்த்தி தலை நிறைய மல்லிகை பூ வைத்துக்கொண்டு பெண் பார்க்க வந்திருக்கிறார். சிலர் கனகாம்பரம் வைத்துக்கொண்டு வருவதுண்டு. இவர் மல்லிகைப் பூவை அல்லவா வைத்துக் கொண்டு வந்திருக்கிறார் என்று கேட்க எல்லோரும் சிரித்துவிட்டார்கள்.
வெளுத்த முடியை மல்லிகைப் பூ என்றும் இளநரை அங்கு மிங்கும் எட்டி பார்க்கும் பொழுது மருதாணியை அப்பொழுதே போட்டு லேசாக செம்பட்டையாக ஆக்கிக் கொள்வோரை கனகாம்பரம் என்று நகைச்சுவையாக கூறுவது உண்டு. இப்படிதான் அப்பொழுது சிரித்து பேசி குதூகலிப்பார்கள்.இது போன்று நாமும் மற்றவருடன் அன்பாக பழகி மகிழ்வோடு வாழ்வோம்..!!