
- நண்பனை ரெயிலில் இருந்து தூக்கி வீசிய வட மாநில இளைஞர்களுக்கு ஆயுள் தண்டனை.
ஒடிசா மாநிலத்தில் உள்ள சுந்துகர்ஹ் மாவட்டம் டூர் கோலா பகுதியைச் சேர்ந்த ஜித்தன் கிரி, அணில் குமார் ஓஜா, சோட்டு படாயக், சுக்தேவ் கடையா, ஆகாஷ் தாஸ் உள்ளிட்ட ஐந்து பேரும் தமிழகத்தில் சென்ட்ரிங் வேலை செய்து வந்துள்ளனர்.இந்த நிலையில் இவர்கள் ஐந்து பேரும் கடந்த 2019 ஆம் ஆண்டு விடுமுறைக்காக சொந்த மாநிலத்திற்குச் சென்றுள்ளனர். அதன் பின்னர் அங்கிருந்து அதே ஆண்டு டிசம்பர் மாதம் சுவிதா விரைவு ரயில் மூலம் மதுரைக்கு வந்துள்ளனர்.
அப்போது ஆகாஷ் தாஸ் வேலைக்கு செல்ல விருப்பம் இல்லாததால் மீண்டும் தான் சொந்த ஊருக்குச் செல்வதாக அவரது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்ட அவர்கள், வேலைக்காக 3000 ரூபாய் முன்பணம் வாங்கிவிட்ட காரணத்தினால் திருப்பி அனுப்ப முடியாது என்றுத் தெரிவித்துள்ளனர்.
இதனை மறுத்த ஆகாஷ் தாஸ், தான் ஊருக்குச் செல்ல வேண்டும் என்று தனது நண்பர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையே இந்த ரயில் கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் அடுத்த தாழநல்லூர் அருகே சென்று கொண்டிருந்த போது ஆத்திரமடைந்த நண்பர்கள் நான்கு பேரும் ஆகாஷ் தாஸை ரயிலில் இருந்து வெளியே தூக்கி வீசியுள்ளனர்.
இதில், ஆகாஷ் தாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விருத்தாசலம் ரயில்வே இரும்பு பாதை காவல்துறையினர் நான்கு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்தனர்.
இந்த வழக்கு குறித்த விசாரணை விருத்தாசலம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் எண் மூன்றில் நடந்து வந்த நிலையில், நீதிபதி பிரபா சந்திரன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதி, கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பு அளித்துள்ளார். அதன் போலீசார் அவர்களை சிறையில் அடைத்துள்ளனர்.