நண்பர் ஒருவரின் வீட்டில் நடந்தது இந்த ஆச்சரியமான நிகழ்வு.
பட்டுப்போக இருந்த ஒரு செடி,
பசுமையாக மாறி,
இப்போது மொட்டுக்களும் மலர்களுமாக பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன், எனது நெருங்கிய நண்பரின் தந்தை முதுமையின் காரணமாக இறந்து போனார். அவர் மறைந்த சில நாட்களில் நண்பரின் வீட்டின் முன்புறத்தில் செழிப்பாக பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்த செம்பருத்தி பூ செடி, கொஞ்சம் கொஞ்சமாக வாடிப் போக ஆரம்பித்தது.
அடிக்கடி நண்பரின் வீட்டுக்குப் போய் வரும் எனக்கு இந்த வித்தியாசம் பளிச்செனத் தெரிந்தது. செடியின் திடீர் வாட்டத்துக்கு காரணம் என்னவென்று நண்பரிடம் விசாரித்தேன்.
“தெரியல ஜான்.
இத்தனை வருஷம் நல்லாத்தான் இருந்தது. இப்போ கொஞ்ச நாளா சரியா பூக்கறதும் இல்ல. இலைகளும் செடியும் கூட வாட ஆரம்பிச்சுடுது.”
“ஓ..”
“சீக்கிரமா பட்டுப் போய்விடும் என நினைக்கிறேன்.”
“பூச்சி ஏதும்…”
“இல்ல… உரம், பூச்சி மருந்து எல்லாம் வச்சு பாத்தாச்சு.”
நண்பரும் நானும் எதுவும் புரியாமல் அந்த செம்பருத்தி செடியையே பார்த்துக் கொண்டிருந்தோம்.
நண்பரின் கண்களில் கொஞ்சம் ஈரம் தெரிந்தது. என்னவென்று கேட்டேன்.
“இறந்து போன எங்க அப்பாவுக்கு ரொம்ப பிடிச்ச செடி இது. தினமும் காலையிலும் சாயங்காலமும் இந்த செடி பக்கத்துல வந்து கொஞ்ச நேரம் நிப்பார். இந்த செடியையே பார்த்துக் கொண்டிருப்பார்.
ஒருவேளை அவர் இந்தச் செடியுடன் ஏதாவது பேசிக் கொண்டிருக்கிறாரோ என்று கூட நாங்கள் நினைப்போம்.”
எனக்கு சட்டென்று எங்கோ படித்த ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது.
நண்பரிடத்தில் நான் சொன்னேன்.
“ஒண்ணு செய்து பாருங்களேன்.”
“என்ன ?”
“தினமும் நீங்க அந்தச் செடி பக்கத்தில போய் நின்னு கொஞ்ச நேரம் பேசி பாருங்க.”
‘என்ன பேசணும்’ என்று ஆர்வத்துடன் கேட்டார் நண்பர்.
சொன்னேன்.
அடுத்த சில நாட்களில் அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது.
பட்டுப் போய் விடுமோ என்று நாங்கள் கவலைப்பட்டுக் கொண்டிருந்த அந்த செம்பருத்தி செடி, கொஞ்சம் கொஞ்சமாக புத்துயிர் பெற்றது.
மீண்டும் பழையபடி பூத்துக் குலுங்க ஆரம்பித்தது.
நண்பருக்கு ஒரே சந்தோஷம்.
“எப்படி ஜான் உங்களுக்கு இது தோன்றியது ?”
“எப்போதோ எங்கேயோ
படித்ததுதான்.
தாவரங்களுக்கும் நம்மைப் போன்றே மகிழ்ச்சி, துன்பம் ஆகிய உணர்ச்சிகள் உண்டு என அறிவியல் ஆய்வாளர்
ஜகதீஷ் சந்திர போஸ் சொன்னதை எடுத்துக் காட்டி யாரோ எழுதி இருந்தாங்க.”
சரி. அந்த நண்பர் செம்பருத்தி செடியிடம் தினமும் சொன்ன அந்த மந்திரம்தான் என்ன ?
“எனது அன்பான செம்பருத்தி செடியே…
உன் மீது என் அப்பா எவ்வளவு பாசம் வைத்திருந்தார் என்று எனக்கு தெரியும்.
உன்னோடு தினமும் அவர் பேசியதும் தெரியும். இப்போது அவர் இந்த உலகத்தில் இல்லை.
ஒருவேளை அவரைக் காணாமல் கூட நீ வாடிப் போய் இருக்கலாம். ஆனால் உனக்கு ஒன்று தெரியுமா ?
உன்னோடு தினமும் பேசிக்கொண்டிருந்த என் அப்பாவின் படத்தை ஃபிரேம் போட்டு உள்ளே மாட்டி வைத்திருக்கிறேன்.
நீ தினமும் பூக்களை கொடுத்தால், அதை வீட்டுக்குள் கொண்டு போய், அப்பாவின் படத்தின் முன் வைப்பேன்.
தயவுசெய்து என் அப்பாவின் படத்தில் வைப்பதற்காகவாவது, பூத்து விடு செம்பருத்தி செடியே…”
இவ்வளவுதான் நண்பர் சொன்ன அந்த மந்திர வார்த்தைகள்.
இந்த வார்த்தைகளில் உள்ள உண்மையை புரிந்து கொண்ட அந்த செம்பருத்தி செடி, அடுத்த ஒரு சில நாட்களில் மீண்டும் வழக்கம்போல பூத்துக் குலுங்க ஆரம்பித்து விட்டது.
நண்பர் இப்போது சந்தோஷமாக இருக்கிறார்.
நண்பரின் அப்பாவும் ஃபோட்டோவில் சந்தோஷமாக சிரித்துக் கொண்டிருக்கிறார்.
செம்பருத்தி பூ செடியும் சந்தோஷமாக பூத்துக் கொண்டே இருக்கிறது.
இந்தப் பிரபஞ்சமும், தாயுமானவரின் இந்த வார்த்தைகளை ஓயாமல் உச்சரித்துக் கொண்டே இருக்கிறது.
“எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே…”




