அன்று வீடு நோக்கி வந்து கொண்டிருந்தேன்,
எப்படியும் மாலை ஐந்து மணி தாண்டியிருக்கும், மழைக்காலம்! வழமையை விட சற்று முன்னரே இருட்டத்துவங்கியிருந்தது….
சரி, பழைய பாலத்தால் போகலாம் என்று வண்டியை அந்த வழி திருப்பி,
சென்று கொண்டிருக்கும் போது,
எனக்கு முன்னால் ஒரு சைக்கிள் சென்றுகொண்டிருந்தது,
பின் கரியலில் ஒரு சிறுமி,
அவரின் தலையில், மழைவந்தாலும் நனையக்கூடாது என்று ஒரு shopping bag!
(எங்கள் வழமை)
முன்னர் சைக்கிளை ஓட்டிச்செல்வது, அப்பாவாக இருந்திருக்க வேண்டும் என்று மனம் ஊகித்தது!
அவர்களை முந்திச்செல்ல மனமில்லாமல், நானும் அவர்களின் பின்னால் மெதுமெதுவாக சென்று கொண்டிருந்தேன்!
எனக்கும் அவர்களிற்கும் இடையில் இருந்த இடைவெளியில் அவர்கள் பேசியது எதுவும் கேட்கவில்லை, ஆனால் அவர்கள் இருவரும் சிரித்து சிரித்து
ஏதோ பேசிக்கொண்டபடி சென்றுகொண்டிருந்தார்கள்!
வாழ்வு என்பதன் அர்த்தம் புரியாத வயது,
ஆனால் அந்த சிறுமியின் கண்களில் இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சமும் அழகாக இருக்கிறது,
அந்த புன்னைகையும், கலகலப்பும் பணத்தை தாண்டி, ஏதோ ஒரு வசீகரத்தை வைத்திருந்தது…!
பணம் தேவையானது, அத்தியாவசியமானது,
ஆனால்,
அந்த தகப்பன் மகளின் உரையாடல்,
shopping bag தொப்பி,
நம்மை நினைத்து அக்கறைப்பட்டுக்கொள்ள ஒரு ஜீவன், இதனை தாண்டிய ஒரு ஆத்மார்த்தமான தேவை மனிதனிற்கு இருப்பதாக எனக்கு அந்த கணத்தில் தோன்றவில்லை….!
என்னைக்கேட்டால்,
எங்கு இருக்கிறோம்,
எப்படி இருக்கிறோம், என்பதை விட,
யாரோடு இருக்கிறோம் என்பதில் தான் சகலதும் சங்கமிக்கிறது..