ஆடி மாதம் இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமான மாதமாகும். அதுவும் ஆடி மாதத்தில் பல விசேஷமான தினங்கள் கொண்டாடப்படுகிறது. அதில் ஒன்றுதான் ஆடி அமாவாசை ஆகும். பித்ருக்களை வழிபட ஒரு வருடத்தில் தை அமாவாசை,ஆடி அமாவாசை, ஆகியவை சிறப்பான நாட்களாக கருதப்படுகிறது. அதில் ஆடி அமாவாசை நாளை ஆகஸ்ட் 4ஆம் தேதி நிகழ்கிறது.
பித்ருக்கள் என்போர் நம் வீட்டில் மறைந்த முன்னோர்கள் அல்லது மூதாதையர்கள் ஆவர். இந்த ஆடி அமாவாசை நாளில் நம் முன்னோர்கள் பித்ருலகத்தில் இருந்து தனது சந்ததியினரை காண பூமிக்கு வருவதாகவும் அந்த நாளில் நம் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்தால் பித்ரு தோஷம் விலகி புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இனி இந்த பித்ரு வழிபாட்டை எப்படி மேற்கொள்ளலாம் என்பதை இனிக் காண்போம்.
வீட்டில் தொடர்ந்து கஷ்டங்கள், கெட்ட நேரங்கள் சூழ்ந்து இருந்தால் முன்னோர்களை படையல் வைத்து வழிபடுங்கள் என்று கூறுவார்கள். அப்படி இந்த ஆடி அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்து மனதார நம் முன்னோர்களை வணங்கினால் நம் வீட்டில் உள்ள கஷ்டங்கள் விலகும், குழந்தை பாக்கியம் உண்டாகும், சுப காரியங்கள் நடைபெறும், நம்மைப் பிடித்த கெட்ட நேரங்கள், தோஷங்கள் விலகும் எனவும் நாம் தர்ப்பணம் செய்வதால் பித்ருக்களுக்கு மோட்சம் கிடைத்து அதனால் அவர்கள் பரிபூரண ஆசியை தனது சந்ததியினருக்கு வழங்குவார்கள் என்பது நம்பிக்கை.
இந்த வருடம் ஆடி அமாவாசை ஞாயிற்றுக்கிழமை நிகழ்வதால் பகல் 12 மணி முதல் 1:30 மணி வரை எமகண்ட நேரம் என்பதால் இந்த நேரத்தில் தர்ப்பணம் கொடுப்பது உகந்தது அல்ல என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தாய் தந்தையரை இழந்த ஆண் மகன் தர்ப்பணம் செய்யலாம். கணவனை இழந்த பெண்களும் தர்ப்பணம் செய்யலாம். தாய் தந்தையரை இழந்த சுமங்கலியாக இருக்கும் பெண்கள் கணவன் உயிரோடு இருக்கும்போது தர்ப்பணம் செய்யக்கூடாது. இது தவிர வீட்டில் நமது முன்னோர்களுக்காக சுத்தமாக செய்யப்பட்ட வடை பாயாசம் மற்றும் உணவுகளுடன் படையல் செய்து வழிபடலாம். தர்ப்பணம் செய்வது மட்டுமல்லாது இன்றைய நாளில் சிவாலயங்களில் சென்று வழிபடுவது, அன்னதானம், வஸ்திரதானம் போன்றவற்றை செய்வதும் மிக சிறப்பான ஒன்றாகும்.