நாளை கார்த்திகை 1: ஐயப்பனுக்கு இருமுடி கட்டுவது எப்படி?.. முழு விளக்கம்..!!

இருமுடிப் பிரியனே சரணம் ஐயப்பா’ – இது மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்க புறப்படும் ஒவ்வொரு ஐயப்ப பக்தரின் இதயத்தில் இருந்தும் எழும் உணர்ச்சி மிகுந்த கோஷம்! நாற்பத்தொரு நாள் (ஒரு மண்டலம்) விரதம் கடைபிடித்து சபரிமலை யாத்திரை புறப்படும் பக்தர்கள் இருமுடி கட்டி புறப்படுவார்கள்.

ஐயப்பன் வழிபாட்டில் இருமுடி மிகவும் புனிதமானது. தனது உடலையும், உள்ளத்தையும் தூய்மையாக்கி மனம் உருகி ஐயப்பனை வேண்டும் பக்தர்கள் அய்யனின் திருமேனி அபிசேகத்துக்கு நெய்யயும், பூஜை பொருட்களையும் கட்டி சுமந்து செல்வது தான் இருமுடி. இருமுடியை கோவிலில் வைத்தும் கட்டலாம். வீடுகளில் வைத்தும் கட்டலாம்.

வீடுகளில் வைத்து கட்டும் போது சபரிவாசனே அங்கு வாசம் செய்வான். அவன் அருள் ஒளி வீசும். இருமுடி கட்டும் நாளில் வீட்டை சுத்தப்படுத்தி ஐயப்பன் படத்தை மலர்களால் அலங்காரம் செய்து படத்தின் முன்பு நெய்விளக்கேற்றி வைக்க வேண்டும். இருமுடி கட்டுவதற்காக வரும் குருசாமியை வாசலில் பாதபூஜை செய்து வீட்டுக்குள் அழைத்து வர வேண்டும்.

குருசாமி வந்ததும் பூஜைகளை தொடங்குவார். அப்போது அய்யப் பக்தர்கள் பஜனை பாடல்களை பாடுவார்கள். இருமுடிகட்டும் பக்தர் குருசாமியின் அருகில் ஐயப்பன் படத்துக்கு முன்பு அமர்ந்து இருக்க வேண்டும். தேங்காயில் நெய்நிறைக்க தொடங்கும் போது நமது பிரார்த்தனைகளோடு சாமியே சரணம் என்றபடி தேங்காயில் நெய்யை நிறைக்க வேண்டும்.

நெய் நிறைந்ததும் அதை மூடி சந்தனம், குங்குமம் பூசி ஒரு சிறிய பையில் வைப்பார்கள். அதற்குள் காணிக்கை பணமும், அன்னதானத்துக்கு சிறிதளவு அரிசியும் வைக்கப்பட்டு இருக்கும். வீட்டில் யாராவது நெய் நிறைக்க விரும்பினால் அவர்களும் நெய் நிறைத்து கொள்ளலாம். மற்றொரு சிறு பையில் பூஜை பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும்.

அதில் மஞ்சள் பொடி, மஞ்சள், பன்னீர், தேன், சந்தன வில்லைகள், குங்குமம், விபூதி, ஊது பத்தி, சாம்பிராணி, கற்பூரம், பேரீச்சம்பழம், உலர்ந்த திராட்சை, முந்திரி , கல்கண்டு, அச்சு வெல்லம், அவல், பொரி, கடலை, மிளகு, கல் உப்பு, எலுமிச்சம் பழம், வெற்றிலை பாக்கு, பாசிபருப்பு, வளையல், கண்ணாடி, சீப்பு, ரவிக்கை துணி ஆகியவை இடம் பெற்றிருக்கும்.

முன் முடியில் (இருமுடியில் முன்பக்கம் இருக்கும் கட்டு) நெய் தேங்காய் மற்றும் பூஜை பொருட்கள் வைத்து கட்டப்படும். பின் முடிக்குள் சபரிமலை தரிசனம் முடிந்து திரும்பும் போது பதினெட்டாம் படி அருகில் உடைக்கவும், வீட்டின் முன்பு உடைக்கவும் இரண்டு தேங்காய்களும் மற்றும் பக்தருக்கு தேவையான பொருட்களும் வைத்து கட்டப்பட்டிருக்கும்.

வசதி வாய்ப்புகள் இல்லாத காலத்தில் பின்முடியில் சமையலுக்கு தேவையான அரிசி மற்றும் வழியில் சாப்பிடுவதற்கு தேவையான தின்பண்டங்களையும் சுமந்து சென்றிருக்கிறார்கள். இருமுடி கட்டி முடித்ததும் வீட்டில் நம்மால் முடிந்த அளவு அன்னதானம் வழங்கலாம். இருமுடி கட்டை குருசாமி தூக்கி நமது தலையில் வைக்கும் போது அவரது பாதங்களை தொட்டு வணங்க வேண்டும்.

தலையில் இருமுடியை சுமந்ததும் வீட்டு வாசலில் தேங்காய் உடைத்து விட்டு திரும்பி பார்க்காமல் தலையில் இருமுடி கட்டும், மனதில் ஐயப்பன் நினைவுமாக புனித யாத்திரையை தொடங்க வேண்டும். நகர வாழ்க்கையில் இல்லங்களில் பூஜை செய்து இருமுடி கட்டுவது சிரமமாக தெரியலாம். ஆனால் இன்றும் கிராமங்களில் பெரும் பாலானவர்கள் வீடுகளில் இருந்து தான் இருமுடி கட்டி புறப்படுகிறார்கள்.

இதனால் ஆண்டு தோறும் வீடுகளில் சகல ஜஸ்வரியமும் அதிகரித்து ஆண்டவனின் அருளும் நிறைகிறது. கோவில்களில் வைத்தும் இருமுடி கட்டி புறப்படலாம். சென்னையில் மகாலிங்கபுரம், ராஜா அண்ணாமலைபுரம், அண்ணாநகர், மடிப்பாக்கம் ஐயப்பன் கோவில்களில் இருமுடிகட்டி விடுகிறார்கள். நாம் பூஜை பொருளுக்கு உரிய கட்டணத்தை செலுத்தினால் எல்லா பொருட்களும் கோவிலிலேயே தந்து விடுகிறார்கள்.

அங்கேயே குருசாமிகள் இருக்கிறார்கள். அவர்களே இருமுடி கட்டி விடுவார்கள். சுமப்பது நம்பாடு. காப்பது அவன்பாடு… பள்ளிக்கட்டு சபரிமலைக்கு… யாரைக் காண.. சுவாமியை காண… என்ற சரண கோஷத்தோடு மலை ஏறுவோம்! வாழ்வில் வளம் பெறுவோம்!

Read Previous

குழந்தைகளுக்கு இந்த 31 தின்பண்டங்களை கொடுக்க வேண்டாம்..!! FSSAI அதிரடி உத்தரவு..!!

Read Next

பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு..!! விண்ணப்பிக்க கடைசி 4 நாள் அவகாசம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular