கேரட் அல்வா இந்தியாவின் பாரம்பரியமான ஒரு இனிப்பு வகையாகும். குறிப்பாக வட இந்திய பகுதிகளில் இது மிகவும் பிரபலமான ஒரு இனிப்பு வகை. விழா காலங்களில் கேரட் அல்வா கட்டாயம் அவர்களின் உணவு பட்டியலில் இணைந்து விடும். கேரட் அல்வா வெறும் சுவை மட்டும் நிறைந்த உணவு அல்ல அதில் ஏராளமான சத்துக்களும் உள்ளது. இதில் உள்ள கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி நிறைந்துள்ளன. மேலும் அதிக அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
கேரட் கண் பார்வைக்கு அதிக நன்மையை தரக்கூடியது. மேலும் சருமத்தை பராமரிக்கவும் உதவி புரிந்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கக் கூடியது. கேரட் அன்டிஆக்சிடென்ட் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தது என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
கேரட் அல்வாவில் சேர்க்கப்படும் பொருட்களான கேரட், பால், நெய், நட்ஸ் போன்ற பொருட்கள் இணைந்து உடலுக்கு தேவையான புரதம், கால்சியம், மெக்னீசியம், மற்றும் விட்டமின்கள் என அனைத்து சத்துக்களையும் வழங்குகிறது. உடலின் எலும்புகள் வலுப்பெறவும் இந்த சத்துக்கள் உதவுகிறது. இவ்வளவு சத்துக்கள் நிறைந்த இந்த கேரட்டினை வைத்து கேரட் அல்வா எப்படி சுவையாக செய்யலாம் என்பதை பார்ப்போம்.
கேரட் அல்வா:
இதைச் செய்ய 500 கிராம் கேரட்டினை எடுத்துக் கொள்வோம். இந்த கேரட்டை நன்கு கழுவி தோலினை சீவி துருவி எடுத்துக் கொள்ளவும். துருவிய கேரட்டினை 300 மில்லி லிட்டர் பால் சேர்த்து வேக வைக்க வேண்டும்.
இப்பொழுது கடாயில் 400 கிராம் சர்க்கரை சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் விட்டு சர்க்கரை பாகு காய்ச்சிக் கொள்ளவும். பாகு கம்பி பதத்திற்கு வர வேண்டும். கம்பி பதத்திற்கு வந்த பின்னர் பாலில் வேகவைத்த கேரட்டினை சேர்க்கவும்.
100 கிராம் அளவு ரவையினை தனியாக வறுத்து இதனுடன் சேர்த்துக் கொள்ளவும். 200 கிராம் நெய் சிறிது சிறிதாக விட்டு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். இப்பொழுது கோவா 100 கிராம் எடுத்து இதனுடன் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கிளறவும் பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை கிளற வேண்டும்.
இந்த அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் பொழுது இதனுடன் சிறிது பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். பின் நெய்யில் முந்திரி, திராட்சை, பாதாம் ஆகியவற்றை வறுத்து சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கி விடலாம்.
சூடு ஆறி இளம் சூடாக இருக்கும் பொழுதே பரிமாறலாம் அவ்வளவுதான் சுவையான கேரட் அல்வா தயார்!