• September 29, 2023

நெசவு தொழிலாளி மருந்து குடித்து தற்கொலை..!!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கடைக்காரன்வளைவை சேர்ந்த கணபதி மகன் அண்ணாமலை (வயது 34), நெசவு தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் மாலையில் தன்னுடைய தந்தைக்கு செல்போனில் பதறியபடி பேசினார். அப்போது, சப்பாணிப்பட்டி பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்புக்குள், 2 மகன்களுக்கும் விஷ மாத்திரையை கொடுத்து விட்டு தானும் சாப்பிட்டு விட்டதாக கூறியுள்ளார். இதைக்கேட்டு பதறி துடித்த கணபதி, அண்ணாமலை கூறிய தென்னந்தோப்புக்கு உறவினர்களுடன் விரைந்து சென்றார். அங்கு மயக்க நிலையில் மகன்களுடன் கிடந்த அண்ணாமலையை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு அண்ணாமலை பரிதாபமாக இறந்து விட்டார். மேலும் 2 சிறுவர்கள் உயிருக்கும் ஆபத்து இல்லை என டாக்டர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதாவது, சிறுவர்களுக்கு, அண்ணாமலை வாயில் விஷ மாத்திரையை கொடுத்த போது கசப்பதாக கூறி மாத்திரையை துப்பி விட்டதாக தெரிகிறது. அப்படி இருந்தும் 2 சிறுவர்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக நங்கவள்ளி போலீசார் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே அண்ணாமலையின் தந்தை கணபதி நங்கவள்ளி போலீசில் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், என்னுடைய மகன் அண்ணாமலை தற்கொலைக்கு அவருடைய மனைவி கோகிலா, மாமியார் மல்லிகா, மற்றும் செல்போனில் கோகிலாவுடன் பேசும் நபர் ஆகிய 3 பேரும்தான் காரணம். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் கோகிலா மற்றும் மல்லிகாவிடம் விசாரணை நடத்தினர். அண்ணாமலை சாவு தொடர்பாக நடத்திய விசாரணையில் வெளியான பல்வேறு தகவல்கள் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: – சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே சூரப்பள்ளி ஊராட்சி கடைக்காரன் வளவை சேர்ந்த அண்ணாமலையும், வனவாசி அருகே சப்பாணிப்பட்டியை சேர்ந்த கோகிலா என்பவரும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கவினேஷ் (6), ஜெகதீஷ் (3) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். அண்ணாமலை திருமணத்துக்கு பிறகு சப்பாணிப்பட்டியில் உள்ள மாமியார் வீட்டில் கடந்த 7 ஆண்டுகளாக குடும்பத்துடன் தங்கி இருந்து நெசவு தொழில் செய்து வந்தார். இதற்கிடையே கோகிலாவின் செல்போன் எண்ணுக்கு எஸ். எம். எஸ். களும், மிஸ்டு கால்களும் வந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக அண்ணாமலை, தன்னுடைய மனைவியிடம் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த கோகிலாவின் தாய், அண்ணாமலையை கண்டித்துள்ளார். மேலும் கோகிலாவும், செல்போனுக்கு வரும் அழைப்பு குறித்து கேட்க கூடாது என கூறியதாகவும் தெரிகிறது. இதில் மனம் உடைந்த அண்ணாமலை தன்னுடைய 2 மகன்களையும் அழைத்துக் கொண்டு கடந்த 17-ந் தேதி ஜலகண்டாபுரம் அருகே உள்ள கடைக்காரன்வளைவில் உள்ள தந்தை வீட்டுக்கு வந்து விட்டார். இந்தநிலையில் மறுநாள் (18-ந் தேதி) கோகிலா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது, தன்னுடைய கணவர் திட்டியதால்தான் தற்கொலைக்கு முயன்றதாக நங்கவள்ளி போலீசில் புகார் அளித்துள்ளார். இதனை அறிந்த அண்ணாமலை மனஉளைச்சலில் இருந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் சப்பாணிப்பட்டி பகுதியில் தென்னை மரத்துக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மாத்திரைகளை தன்னுடைய மகன்களுக்கு கொடுத்து விட்டு தானும் சாப்பிட்டு அண்ணாமலை தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கோகிலா செல்போனில் அடிக்கடி பேசிய நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோகிலாவிடம் செல்போனில் பேசிய நபர், அண்ணாமலைக்கு தெரியாத நபராக இருந்ததால்தான் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதுவே அண்ணாமலையின் உயிரை இழக்க காரணமாக இருந்து விட்டது என்று அந்த கிராம மக்கள் கண்ணீர் மல்க கூறினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

Read Previous

கூடுதல் பஸ்கள் இயக்க மக்கள் கோரிக்கை..!!

Read Next

சங்ககிரியில்  பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular