
திருக்குவளை அருகே பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் காதலர் உட்பட மூன்று பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருக்குவளை அருகே உள்ள கொத்தங்குடி அய்யூா் பகுதியை சார்ந்த 14 வயதுடைய மாணவி ஆலத்தம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த மாணவியும் அதே பகுதியை சார்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் சின்னதுரை என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு மாணவியின் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவியின் வீட்டிற்கு சென்ற சின்னத்துரை மாணவி எங்கே என கேட்டுள்ளார். அப்போது மாணவியின் சகோதரிக்கும் இவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சின்னத்துரை தனது உறவினர்கள் சேர்ந்து மாணவியின் சகோதரியை தாக்கினார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதற்கிடையே கடந்த 26 ஆம் தேதி மாலை வீட்டில் எங்கு தேடியும் மாணவி காணவில்லை இதை தொடர்ந்து வீட்டின் தோட்டத்தில் மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாய் மீட்கப்பட்டார். இதை தொடர்ந்து அவரது உடல்நிலை கைப்பற்றிய பெற்றோர்கள் அவரது சாவிற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காவல்துறையினர் மாணவியின் பெற்றோருக்கு சமரசம் பேசி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சிறுமியின் அக்கா தாக்கப்பட்ட வழக்கில் சின்னத்துரை மற்றும் அவரது தந்தை, தாய் மற்றும் அண்ணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.