
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டின் அருகே மர்ம நபரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
தற்பொழுது அவரது உடல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அரசியல் கட்சியினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் மனைவி வழக்கஞர் பொற்கொடி தரப்பில் ஆம்ஸ்ட்ராங் உடலை அலுவலக வளாகத்திலேயே அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டுமென சென்னை மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.
இந்த மனு தொடர்பாக மாநகராட்சி ஆணையர் இதுவரை எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை. இதனை தொடர்ந்து இந்த கோரிக்கை தொடர்பாக அவசரமாக விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பொற்கொடி தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் இந்த மனுவை தனி நீதிபதி ஒருவர் விசாரிக்க பொறுப்பு தலைமை நீதிபதி உத்தரவு தெரிவித்துள்ளார். இந்த உத்தரவை தொடர்ந்து இன்று காலை ஒன்பது மணிக்கு காணொளி மூலம் இந்த வழக்கம் விசாரிக்கப்பட உள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் தனி நீதிபதி யார் என்பதை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் முடிவு செய்து அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.