
அரிசிக்கு உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் மத்திய அரசு அரசி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதித்து வருகிறது.
சர்வதேச விலையை விட இந்திய அரிசியின் விலை மலிவாக இருப்பதால் இந்திய அரிசிக்கு வலுவான தேவை இருக்கிறது. இதன் விளைவாக 2021-22 மற்றும் 2022-23 ஆம் ஆண்டுகளில் சாதனை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக பெய்து வந்த கனமழை காரணமாக இந்தியாவில் அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அரிசி விலை உயர்ந்து வருகின்றது. இந்த சூழலில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.
பாசுமதி அரிசி ஏற்றுமதியை ஒழுங்குபடுத்துவதற்கு வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் பொறுப்பாக இருப்பதாலும் இந்த நோக்கத்திற்காக ஏற்கனவே ஒரு இணைய அடிப்படையிலான அமைப்பு நடைமுறையில் இருப்பதாலும் பாசுமதி அரிசி என்ற போர்வையில் வெள்ளை பாசுமதி அல்லாத அரிசியின் சட்டவிரோதமான ஏற்றுமதியை தடுப்பதற்கு கூடுதல் பாதுகாப்புகளை அறிமுகப்படுத்த அரசு அபெடாவுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறது.
பாசுமதி அல்லாத வெள்ளை அரிசியின் தவறான வகைப்படுத்துதல் மற்றும் சட்டவிரோதமான ஏற்றுமதி தொடர்பாக அரசாங்கத்திற்கு நம்பகமான கள அறிக்கைகள் கிடைத்திருக்கின்றன, இதனுடைய ஏற்றுமதி 20 ஜூலை 2023 முதல் தடை செய்யப்பட்டுள்ளது.