படித்ததில் பிடித்தது: ஒவ்வொரு செயலுக்கும் கண்டிப்பாக ஏதேனும் ஒரு காரணம் இருக்கும்..!!

ஒரு காட்டில் வாத்துக்குடும்பம் ஒன்று இருந்தது. அம்மா வாத்து முட்டையிட்டு, அடைகாத்து குஞ்சு பொறித்தது.
பிறந்த குஞ்சுகள் அனைத்தும் அடர்ந்த, பல வண்ணங்கள் கொண்ட முடியுடன் அழகாவும், துறுதுறுப்பாகவும் இருந்தன.
ஆனால், அதில் ஒரு குஞ்சு மட்டும் அழகும், அடர்த்தியும் இல்லாத முடியுடன் மெலிந்து போய் அசிங்கமாக இருந்தது. அதன் குரலும் மற்ற குஞ்சுகள் போல் இல்லாமல் வித்தியாசமாக ஒலித்தது.
உடன்பிறந்த வாத்துக் குஞ்சுகளுக்கு இந்த அசிங்கமான வாத்துக்குஞ்சைக் கண்டாலே பிடிக்கவில்லை. அதன் தாய்கூட அதை வெறுத்து, அதை மட்டும் ஒதுக்கிவிட்டு மற்ற குஞ்சுகளுடன் நீந்தியது.
அசிங்கமான வாத்துக் குஞ்சு மிகவும் வேதனை அடைந்தது.
‘நான் மட்டும் ஏன் இப்படி அவலட்சணமாக பிறந்தேன்..? முட்டையிலேயே உடைஞ்சு போயிருக்கலாமே..!!’ என்று வேதனையுடன் அழுது கதறியது.
நாட்கள் ஓடின…..
மற்ற வாத்துக் குஞ்சுகள் வளர வளர மேலும் அழகாயின. இதுவோ உயரமாகவும் மேலும் நிறமற்றும் காணப்பட்டது. தலையில் வேறு குச்சிகள் போல ஓரிரு முடிகள் வளர்ந்து, அதை இன்னும் அசிங்கமாக ஆக்கிற்று.
தினமும் வேதனையும், கண்ணீருமாகத் தனிமையில் வாழ்ந்து வந்தது.
சில வேளைகளில் அன்பாய் அம்மாவையும், சகோதரர்களையும் நெருங்கும். ஆனால் சில நொடிகளிலேயே அவை இதைக் கொத்தி விரட்டிவிடும். மேலும் கொஞ்ச நாள் சென்றது.
அசிங்கமாக இருந்த வாத்துக் குஞ்சின் நிறமற்ற முடிகள், பிரகாசிக்கும் வெண்மை நிறமானதாக மாற ஆரம்பித்தன. தலையில் நீண்டிருந்த முடிகள், அழகான கொண்டையாக மாறிற்று. இறக்கைகள் பலமடைந்து நீளமாக மாறிவிட்டன.
இப்போது அந்த அசிங்கமான வாத்துக்குஞ்சு, கண்கொள்ளா அழகுடன் காட்சியளித்தது.
அம்மா வாத்துக்கும், கூடப் பிறந்த மற்ற வாத்துக்களுக்கும் ரொம்ப ஆச்சரியமாகப் போனது. அதன் அருகில் நெருங்கக்கூட கூச்சமடைந்து, வெட்கப்பட்டன.
நடந்தது என்னவென்றால்…….
ஒரு அன்னப்பறவை தவறுதலாக வாத்தின் கூட்டில் முட்டையிட்டுச் சென்றுவிட்டது.
இது தெரியாமல் வாத்தும் தன்னுடைய முட்டையென்று எண்ணி அடைகாத்து, குஞ்சு பொறித்து விட்டது.
அதுதான் அந்த அசிங்கமான வாத்துக் குஞ்சு.
ஒரு நாள் வந்தது.
அசிங்கமான வாத்துக் குஞ்சாய்த் தோற்றம் அளித்த அன்னப்பறவையின் சிறகில் ஒரு உந்துதல் தோன்றியது.
படபடவென்று சிறகை அடித்து மேலே எழும்பியது. கேலி செய்தவர்கள் வெறுத்து, விரட்டியவர்கள் எல்லாம் வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொள்ள,
அன்னப்பறவை கம்பீரமாய் உயர உயரப் பறந்து ஒரு புள்ளியாக மறைந்து போனது.
எவர் கண்டார்.. ?
உங்களைத் தூற்றபவர்கள் யாவரும் வாத்து கூட்டங்களாக கூடஇருக்கலாம்..
உங்கள் திறமையான
சிறகுகள் வளர்ந்து…….
உங்கள் காலம் கனிந்து..
அன்ன பறவையாய் மாறும்
காலம் வரை பொறுத்திருங்கள்..
ஒவ்வொரு செயலுக்கும் கண்டிப்பாக ஏதேனும் ஒரு காரணம் இருக்கும்.
உங்களுக்கான நேரத்தை
இறைவன் ஒதுக்கி கொடுப்பான்…..
அது வரை சற்று நிதானமாக
இருக்கப் பழகிக்கொள்ளுங்கள்…

Read Previous

மூலநோய் இருப்பவர்கள் எதையெல்லாம் சாப்பிடக்கூடாது..!! வாங்க பார்க்கலாம்..!!

Read Next

தைராய்டு கேன்சர் பிரச்சனையா? கண்டிப்பா இந்த அறிகுறிகள் இருக்கும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular