பேருந்தில்,
பன்னிரண்டு பதினைந்து பேர் ஒரே குடும்பம் அல்லது சொந்தக்காரர்களாக இருக்கலாம் வேக வேகமாக ஏறினர்..வழியெங்கும் பேசிக் கொண்டே வந்தனர்..
அவர்களின் குடும்பத்தில் யாரோ ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார் என்பது மட்டும் அவர்கள் பேச்சில் தெரிந்தது..
அவரை பார்க்கவே இவர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதும் புரிந்தது..
சில நிமிடங்களில் ஒருவருக்கு Call வந்தது..
அவர் பேசி விட்டு,
“போய்ட்டாராம்”
என்று தழுதழுத்த குரலில் சொல்ல,
எல்லாரும் “எப்ப…நேத்து நல்லா தான இருந்தாரு” என அழ ஆரம்பித்தனர்..
ஒருவர் “ஏதோ ஒரு நேரத்துல நான் சொன்ன சொல்லுக்காக சாவற வரைக்கும்
உன் மூஞ்சிலே முழிக்க மாட்டேன்னு சொன்னாரு..சொன்ன மாரியே செஞ்சிட்டாரே”என்று அழுகையை அடக்க முடியாமல் கதறினார்..
உண்மையில் சில நிமிடங்கள் பேருந்தே கண் கலங்கியது..
சில தருணங்கள் நினைவுகளாக மாறும் வரை அதை நாம் பெரிதாக எடுத்துக் கொள்வதே இல்லை..
என் அருகில் அமர்ந்திருந்தவர்,
“ஆமா.. அவ்ளோ சொத்து நெல பொலம் இருந்தத எல்லாத்தையும் முன்னமே
எழுதி குடுத்துட்டாரு..இருக்கும் போது ஒருத்தனும் அவர போய் பாக்கல..
நல்லா இருக்கியான்னு ஒரு வார்த்தை கேக்கல… ஒரு வேளை சோறு கூட சரியா போடல..செத்த பிற்பாடு ஒப்பாரி வைக்குறானுங்க”
என்று மெதுவாக சொன்னார்..
மருத்துவமனை நிறுத்தம் வந்ததும் அவர்களும் அணைவரும் இறங்கினர்..
அவர்கள் இறங்கிய பிறகு,
எனக்குள்,
சாகும் நொடி அவர் என்ன நினைத்திருப்பார்??
என்னென்ன எண்ண அலைகள் அவர் மனதில் ஓடியிருக்கும்?
மனிதர்களை பற்றிய பார்வை இறுதி மூச்சில் என்னவாக இருந்திருக்கும்? கடைசி வார்த்தையாக ஏதேனும் யாரிடடும் சொல்ல நினைத்திருப்பாரா?
என்பன போன்ற பல கேள்விகள்
என்னைத் துளைத்தெடுத்தன..
மரணம் எல்லாவற்றிலும் இருந்து விடுதலை அளிக்கிறது.. எல்லா மனிதர்களையும் மன்னிக்கிறது..
எல்லோராலும் கைவிடப்பட்டவனுக்கு மரணம் தானே இறுதி நம்பிக்கை..