” கல்வி பசி தீர்க்கவில்லை என்றால் கைகளாவது பசி தீர்க்க வேண்டும் ” என்ற கருத்தோடு மூத்தவர்கள் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் விவசாயம்.
நடுத்தர வர்க்கத்து விவசாயம் என்பது உழவனை சுகப்படுத்துகிற விடயமாக அன்றும் இல்லை இன்றும் இல்லை.
விவசாயம் என்பது அவர்களுக்கு ஒரு தொழிலாக இல்லாமல் ஏதாவது ஒன்றில் ஈடுபட்டிருத்தல் என்பதாகவே இருக்கிறது.
” உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கும் மிஞ்சாது ” என்று கணக்கு போடத் தெரிந்தவர்கள், ஏன் மிஞ்சவில்லை என்பதற்கு மட்டும் கணக்கை கண்டுபிடிக்கவில்லை.
” உழவன் என்பவன் எப்போதும் அடுத்த ஆண்டு பணக்காரனாக ஆக இருப்பவன்” என்று ஒரு ரஷ்ய பழமொழி உண்டு.
வியர்வையை விதைத்த அளவுக்கு நம்மால் தானியத்தை அறுக்க முடிவதில்லை. வியர்வைக்குரிய பலன் வீடு வருவதில்லை அல்லது விலாசம் மாறிவிடுகிறது.
பல குடும்பங்களில் இன்றும் இப்படித்தான்!