தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் இன்று ஒரு தகவல்…
ஒருத்தர் ஒரு ஆபீஸ்லே வேலை பார்க்கிறார். ஆபீஸ் முடிஞ்சு சாயந்தரம் வீட்டுக்குப் போகும்போது பார்த்தீங்கன்னா… ஒரு பெரிய பையைத் தூக்க முடியாமே தூக்கிக்கிட்டுப் போவார்.
எல்லாம் ஆபீஸ் ஃபைல்கள்… பதிவேடுகள். வீட்டுக்குப் போயும் ஆபீஸ் வேலைகளைப் பார்க்கறதுக்காக அவர் அப்படிச் சுமந்துகிட்டுப் போறார்.
‘கடமையிலேயே கண்ணுங்கருத்துமா இருக் கறவர்’ அப்படின்னு அவருக்குப் பேரு.
பலபேர் இப்படி உண்டு.
அலுவலகத்தை வீட்டுக்குச் சுமந்து கொண்டு போகிறவர்கள்.
இப்படிப்பட்டவர்கள் வாழ்க்கை ஒரு திருவிழா என்பது தெரியாமலே வாழ்ந்து முடிச்சுடறாங்க. வாழ்க்கைங்கறது கடமைகளை நிறைவேற்றுவதற்காக அமைஞ்ச ஒண்ணா… அல்லது அது ஒரு கொண்டாட்டமா ங்கறதை முதல்லே புரிஞ்சிக்கணும் -ங்கறார் ஓஷோ.
வாழ்க்கை கொண்டாடுவதற்காக அமைந்த ஒன்று.
இப்படி நினைக்கிறவங்க வேலை செய்யற தையே விட்டுடுவாங்க -ன்னு அர்த்தமில்லே…!
அவங்க நிச்சயமா வேலைகளைச் செய்வாங்க. ஆனா அதுவும் அவங்க கொண்டாட்டத்தின் ஒரு பகுதியா அமைஞ்சுடும். விழாவின் அம்சம் அதிலே கலந்திருக்கும்.
வேலையிலேயே மூழ்கிப் போறவங்களுக்கு வாழ்க்கையே வேலையா ஆயிடும்… பலபேர் அப்படித்தான்.
வாழ்வையே ஒரு தொழிற்சாலையா மாத்திக்கிட்டு கவலைப்படறாங்க.
வாழறதுக்காகத்தான் வேலை செய்யறோம். ஆனா வேலையே வாழ்க்கையாகிப் போயிடுது. ஆடிப்பாடி மகிழ நேரமில்லாமலே அந்திம காலம் வந்து சேர்ந்துடுது.
எல்லாரும் கொஞ்சம் நல்லா யோசிச்சுப் பாருங்க. மனிதனைத் தவிர… மற்ற எல்லாத்துக்கும் இந்த வாழ்க்கைங்கறது ஒரு விளையாட்டுத்தான் – திருவிழா தான்.
இவன்தான் வேலை செய்யறான்… கடினமா உழைக்கிறான். ஏராளமா கண்ணீர் சிந்தறான்…. நமக்கு நாமே குழப்பத்தையும் சிக்கலையும் உண்டாக்கிக் கொள்கிறோம்…
அதுலே சிக்கிக்கிறோம்… அப்புறம் காலம் முழுவதும் ஓய்வு கிடைக்காதா, நிம்மதியா வாழ்க்கையை அனுபவிக்க முடியாதான்னு ஓடிக்கிட்டே இருக்கிறோம்.
அந்த நாள் வர்றதே இல்லை.
தொழில் போதையிலே மூழ்கிக் கிடக்கறவங்களுக்கு ஓய்வு, மகிழ்ச்சி, வாழ்க்கையின் இன்பம் எதுவுமே தெரியறதில்லை.
பழங்குடி மக்களைப் பாருங்கள்.
தொழிலுக்கும் கொண்டாட்டத்துக்கும் என்ன உறவுங்கறது புரியும்.
நாள் பூரா அவங்க உழைக்கறது இரவில் ஆனந்தமா ஆடிப்பாடி மகிழத்தான்.
ஆனால் நாகரிக மனிதன் என்ன செய்யிறான்?
பகல்லே மட்டுமில்லே, ராத்திரியிலேயும் உழைக்கிறான்.
இரவு பகலா உழைக்கிறேன் சார் – அப்படின்னு பெருமையாவும் சொல்லிக்கிறான்.
இன்றைய உலகத்துலே ஆனந்தம் இருக்க வேண்டிய இடத்தையெல்லாம் பொழுது போக்கு ஆக்கிரமிச்சுக்கிட்டிருக்கு.
ஆனந்தம்ங்கறது வேறே… … பொழுதுபோக்குங்கறது வேறே
கொண்டாட்டத்துலே , . நீங்களும் கலந்துக்கலாம் பங்கு கொள்ளலாம்
பொழுது போக்குலே நீங்க வெறும் பார்வையாளர்தான். ஆட்டத்தைப் பார்க்கறது பொழுது போக்கு.
நீங்களே ஆடறது ஆனந்தம்… கொண்டாட்டம். வாழ்வையே ஒரு வேலையா ஆக்கிக்கறவங்க இந்த உலகத்தையே ஆக்கிப்புடறாங்க. பைத்தியக்கார விடுதியா ஒரு
எதையோ நோக்கி எங்கேயோ ஓடும்
பைத்தியக்காரர்களாகத்தான் அவங்க காட்சி அளிக்கிறாங்க. எங்கே ஓடறோம்ங்கறது யாருக்கும் தெரியாது.
ஒருத்தன் வாடகைக் கார்லே ஏறி உட்கார்ந்து ‘போ வேகமா’ -ன்னான். கார் பறந்துது… கொஞ்ச நேரம் கழிச்சி… காரை ஓட்டினவர் மெதுவா திரும்பி “எங்கேங்க போகணும்?” -ன்னு கேட்டார்.
அதுக்கு இந்த ஆளு…
“எங்கே போகணும்ங்கறது முக்கியமில்லை… நான் வேகமாப் போகணும்ங்கறதுதான் முக்கியம்!” -ன்னானாம்.
இது மாதிரிதான் வாழ்க்கையிலே எல்லாரும் பறந்துகிட்டிருக்காங்க.
ஒரு ரயில்வே ஸ்டேஷன். பிளாட் பாரத்துலே ஒருத்தன் அவசரமா எதையோ தேடிக்கிட்டிருந்தான்.
“என்னத்தைத் தேடறீங்க?” -ன்னார் ஒருத்தர்.
“என் டிக்கெட்டைத் தவறவிட்டுட்டேன் சார்!” -ன்னு சொல்லிபுட்டு… மறுபடியும் குனிஞ்சி தேடினார். இதுக்குள்ளே ரயில் வந்துட்டுது.
“பரவாயில்லே… வாங்க… வேறே டிக்கெட் வாங்கிக்கலாம்!” -ன்னார் அவர்.
“அது ஒண்ணும் கஷ்டமில்லே சார்… வேறே டிக்கெட் வாங்கிக்கலாம்… ஆனா அந்த பழைய டிக்கெட் கிடைச்சாத்தானே நான் எந்த ஊருக்குப் போகணுங்கறது தெரியும்!” அப்படின்னான் இவன்.