Oplus_16908288
# படித்து பகிர்ந்தது #
படுக்கை (சிறுகதை)
அப்பா செத்து 10 நாளாச்சு காரியமும் முடிச்சாச்சு. தீட்டுக்கழிக்கனும்னு சொல்லி வீட்டுல கெடந்த ஆகாதது போகாதது எல்லாத்தையும் தேடிப்புடிச்சி கழிப்பு கழிக்கப் போறப்ப அப்பா படுத்திருந்த கட்டில்ல அவர் சாகும் போது இருந்த பெட்ட என்ன பண்ணுறதுன்னு பேச்சு வந்துச்சு.
அப்ப அம்மா சொல்லிச்சி “அது சும்மா சாத்திரத்துக்கு தண்ணியத் தெளிச்சி காயவைச்சி உள்ளாற எடுத்து வைச்சிக்கலாம் வெளியே தூக்கிப் போட்டுஐ வேணாம்”னு.
ஆனா அதுக்கு மருமகளுக ஒத்துக்க, ஏன்னா ”ஏற்கனவே அது இத்துப் போய்க் கெடக்கு அவரு படுக்கையில கெடந்தப்ப ஒன்னுக்கும், ரெண்டுக்கும் போய் அது வீணாப் போய்டுச்சு. பேசாமா அதைத் தூக்கி எறிஞ்சிட்டு புதுசா இலவம்பஞ்சுல பெட் வாங்கிப்போட்டுறலாம்”னு சொன்னாங்க.
அப்ப அம்மா சொல்லிச்சி, ”அந்த பெட் அப்பா ஆசையா 40 வருசத்துக்கு முன்னாடி வாங்குனது அப்ப மொத மொதல்லா கெடைச்ச போனஸ் பணத்துல ஆசையா வாங்குனது, அது பலதடவ பெட் செய்யிற வருக்கிட்ட போய் துணிமாத்தி கொஞ்சம் பஞ்சு சேத்து ரெடி பண்ணி கொண்டாந்துருவாரு, பலதடவ அது மாதிரி ரெடி பண்ணிருக்காரு இருக்குற கொஞ்சநாள் அவரு ஞாவகமா அது இருக்கட்டும் அதுல படுத்தா எனக்கும் நிம்மதி அவர் இருக்குறமாதிரி இருக்கும்”னு சொல்லிப்பாத்தாங்க.
ஆனா அது எடுபடல ஏன்னா மருமகளுக அந்த மரக்கட்டில எடுத்து அவங்க படுத்துக்கலாம்னு பிளான் போட்டாங்க. அதுனால சொன்னாங்க”. என்ன அத்த அது மோசமா இருக்கு, அதுவும் போக அவர் ராத்திரி செத்து கெடந்து காலையிலதான் நாம பாத்தோம் அதுக்குள்ள அவர் ஒடம்புல ஒடம்பு டி கம்போஸ் கிருமிகள் எல்லாம் நீரோட பெட்டுல வழிஞ்சிருச்சு அதுவும் போக பலதடவ அவர் கடைசி காலத்துல பெட்டுலயே தான் எல்லாம் நடந்துச்சு என்னாதான் பாலித்தீன் விரிச்சிப் படுக்கப்போட்டிருந்தாலும் அதெல்லாம் முழுசா பெட்ட பாதுகாத்திருக்காது. நாத்தம் வேற அடிக்குது தூக்கிப் போட்டுட்டு வேற புத்தம் புதுசா வாங்கிடலாம்”னு பிடிவாதம் புடிச்சாங்க.
ஆனா அம்மா அதை ஏத்துக்கல, ”அவரோட நான் வாழ்ந்த வாழ்க்கை என்னோட மகனுக சிறுசில இருந்து உருண்டு பொறண்டு வளந்தது எல்லாம் அதிலதான். தொட்டில இவனுக படுக்க மாட்டானுக, எல்லாம் பெட்டுலதான் தூங்குவானுக. அது குடுமபத்துல ஒரு அங்கம் மாதிரி, வேணுமானா அவர் செஞ்சமாதிரி அதை பெட் ரிப்பேர் பண்ணுறவங்ககிட்ட குடுத்து சரி பண்ணிப்போட்டுக்கலாம்”னு சொன்னவுடன அர மனசா ஒத்துக்கிட்டு பெட் ரிப்பேர் பண்ணுறவர் அவங்க ஏரியாவில எப்பையும் பண்ணுறவர் கிட்டப் பேசினாங்க.
ஆனா அவரும் மருமாளுக சொன்னதைத்தான் சொன்னாரு.
”தூக்கி வெளியே எறிஞ்சிட்டு புதுசா வாங்கிப்போடுங்க எத்தன நாள் தான் நானும் அதை ரிப்பேர் பண்ணுறதுன்னு” சொல்லிட்டாரு.
வேறவழியில்லாம பெட்ட த்தூக்கி எறியிறதுன்னு முடிவு பண்ணித் தூக்கி எறிஞ்சாச்சு. குப்பையில போட்டாச்சு. அதே கையோட பெட்டு தைக்கிறவர் கிட்ட புத்தம் புதுசா கட்டில் சைசுக்கு அளவெடுத்து செய்யச் சொல்லியாச்சு, அவரும் மூணு நாள் டைம் கேட்டாரு. அதைத்தயார் செஞ்சு குடுக்க. எத்தனை கிலோ பஞ்சு வேணுமின்னு கேட்டு அத்தன கிலோவுக்கு காசு கணக்குப் பண்ணி துணி தையக்கூலி எல்லாம் சேத்து ஒரு ரேட் சொன்னாரு. அதுக்கு அட்வான்ஸ் கொடுத்தாச்சு.
ஆனா அவர் சொன்ன மூணுநாள் முடிஞ்சும் அவர் பெட் குடுக்கல. மழை வந்துருச்சு அதுனால பஞ்சக்காயப்போட முடியல கொஞ்சம் லேட்டாகும் பொறுத்துக்கோங்க குடுத்துருறேன்னு சொன்னாரு. வேற என்ன செய்ய காத்திருக்க வேண்டியதாப் போச்சு.
இதுக்கு நடுவில காரியம் எல்லாம் முடிச்சவன்ன அப்பா இருந்த கட்டிலத்தூக்கி கழுவிக் கிழுவி பெயிண்ட் அடிக்கிறவரைக் கூப்புட்டு பெயிண்ட் அடிச்சி புதுசு மாதிரி ஆக்கி அத மூத்த மருமக எடுத்துக்கிட்டா, அது பத்தி அம்மா ஒன்னும் சொல்லல. நான் பாயவிரிச்சே படுத்துக்கிறேன்னு சொல்லீட்டாங்க.
சொன்ன மாதிரி பெட் தயாரிக்கிறவர் புத்தம் புதுசா பெட்டக் கொண்டாந்து எறக்குனாரு. பழச விட இது பெருசா இருந்துச்சு. படுத்தா நல்லா சொகமா இருந்துச்சு. குடுத்துட்டு பேசுன காசவிட கொஞ்சம் பஞ்சு கூடிப்போச்சு, வேணுமின்னா வெயிட் போட்டுக் காட்டுறேன்னு வெயிட் போட்டுக் காட்டி அதுக்குண்டான காசையும் வாங்கிட்டுப் போயிட்டாரு.
அப்ப மருமகளுக ”அத்த வேணுமின்னா நீங்க பெட்டுல படுத்துக்கோங்க அதான் புதுசா வந்திரிச்சில்ல”னு சொன்னாக.
அப்ப அம்மா சொல்லிடுச்சு வேணாம் நீங்களே வைச்சிக்கோங்க அவர் வாங்கிக் குடுத்த ஜமுக்காளம் இருக்கு அத விரிச்சிப் படுத்துக்கிறேன்னு சொல்லீட்டாங்க.
இதுக்கு நடுவில அப்பா ரூம் சுத்தப்படுத்தயில, அவர் ஒரு கவர் வைச்சிட்டுப் போயிருந்தாரு. அதைக் கொண்டாந்து எல்லார் முன்னிலையிலும் படிச்சப்ப அதுல அவர் எழுதியிருந்த விசயத்தப்பாத்து எல்லாருக்கும் மூச்சு நின்னு போச்சு.
அது என்னான்னா ”அவர் தன்னோட மனைவிக்குக் கூடத் தெரியாம வைச்சிருந்த ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூவா அந்தப் பெட்டுக்குள்ள பிளாஸ்டிக் கவர்ல போட்டு வைச்சிருக்குற தாகவும் அதை தனக்குப் பின்னால் அம்மாவிடம் ஒரு லட்சமும் மீதிய பேரப்பிள்ளைகளுக்கு எதுனாச்சும் வாங்கிக்கொடுக்கவும்”னு எழுதியிருந்துச்சு.
அதைப் படிச்சா மூச்சு நிக்காம என்னா செய்யும் அம்புட்டுக் காசையும் கொண்டு போய் குப்பத்தொட்டில போட்டுட்டமேன்னு வயிறு கலங்கிப்போச்சு. இப்ப அம்மா சொன்னாங்கா ”அதான் நான் தலையால அடிச்சிக்கிட்டேன் எவ கேட்டான்னு இப்ப அம்புட்டும் போச்சு ”னு கோவமா சொன்னாங்க.
அப்ப மகன் சொன்னான் இருங்க எதுக்கும் ஒரு முயற்ச்சி பண்ணுவோம் விசாரிப்போம்னு சொல்லிட்டு கேட்டான் “பெட்ட எங்க கொண்டுபோய் போட்டீங்க”ன்னு கேட்டான் அதுக்கு மருமகளுக சொன்னாக நம்ம தெரு மொனையில இருக்குற குப்பத்தொட்டில தான் அதைத்தான் கார்ப்பொரேசன் காரன் காலையில வந்து அள்ளிட்டுப் போயிருப்பானேன்னு பொலம்புனாக.
சரி பார்ப்போம்னு சொல்லிட்டு மறுநாள் கார்ப்பரேசன் லாரி வார டைமுல காத்திருந்து அவங்ககிட்ட கேட்டான் மகன்காரன், ”இங்க எடுக்குற குப்பைய எங்க கொண்டுபோய் போடுவீங்க”னு.
அதுக்கு அவங்க சொன்னாங்க அது எல்லாம் ஊருக்கு வெளியே இருக்குற பெரிய குப்பமேட்டுலதான் போடுவோம் ஏன் கேக்குறீங்கனு “ கேட்டாங்க.
அப்ப மகன் சொன்னான் அப்பா தவறிட்டாரு அவரோட பெட்ட இந்தக்குப்ப தொட்டில போட்டோம் ஆனா அப்புறம்தான் தெரிஞ்சது அதுக்குள்ள முக்கியமான டாக்குமெண்ட் இருக்குன்னு அதான் தேடுறோம்”னு.
அப்ப அவங்க சொன்னாங்க ஒரு விசயம் தெரியுமா இங்க கொட்டுற எல்லாக் குப்பையும் அங்க போகாது நாங்க வாரதுக்குள்ள நைட்டுல பலபேர் அதை கெளறிப்பாப்பாங்க. ஒரு கும்பல் பிளாஸ்டிக் ரீ யூஸ் பண்ணப் பொறுக்குவாங்க. இன்னும் செலபேர் குப்பையில தெரியாம வார பொருள்களுக்காகத் தேடு வாங்க. நீங்க சொன்ன பெட் மாதிரி பொருள்கள் எல்லாம் நைட்டோட நைட்டா எடுத்துட்டுப்போய் பெட் தயார் பண்ணுறவங்ககிட்டக் கொடுத்துருவாங்க. எல்லாரும் அதை வாங்கமாட்டாங்க. ஆனா சில பேர் அதை வாங்கி பஞ்ச மாத்திரம் எடுத்து பிரிச்சி கண்டிசன் பண்ணி புதுப்பஞ்சோட சேத்துருவாங்க, அது குப்ப மேட்டுக்குப் போகாதுன்னு “ சொன்னவன்ன ஆடிப்போயிட்டான் மகன்காரன்.
இனிமே அதைத்தேட முடியாதுன்னு முடிவு பண்ணிட்டு வீட்டுக்கு வந்து விசயத்தைச் சொன்னான். இப்புடிப் பண்ணுவாறா மனுசன் நு எல்லாரும் அவரைத் திட்டுனாங்க.
அதைப் பாத்துக்கிட்டு இருந்த அம்மா ஒன்னும் சொல்லல. ஏன்னா அவர் சாகுறதுக்கு முன்னாடி தன்கிட்ட அந்தப் பணவிசயத்தைச் சொன்னதும் அதை எடுத்துப் பத்திரப்படுத்தியதையும். பெட்டத் தூக்கிப் போடுற முடிவுக்கு வந்தவன்ன வழக்கமா பெட்டு செய்யிறவர்கிட்ட கெஞ்சி அந்தப் பஞ்சயே எடுத்துப் புதுபெட்டு செஞ்சிட்டு வந்ததையும் நெனச்சுப் பாத்தாங்க.
வீட்டுல எல்லாரும் வெளியே போயிருந்தப்ப அம்மா அப்பா போட்டா முன்னாடி கண்ணீர் வடிச்சிட்டு சொன்னாங்க”, நீங்க சொன்னதுதான் உண்மை உங்களுக்கு அப்புறம் என் சொல்லை யாரும் கேக்கமாட்டாங்க. வீணா சண்டை போடாதே ஒனக்கென பணத்த வைச்சிக்க. நீ நெனைக்கிறத நீயாவே செய்னு சொன்னீங்க. அதான் இன்னிக்கி நடந்திருக்கு. ”ஏன் என்ன விட்டுட்டு போனீங்கன்னு அழுதுகிட்டே அந்தபெட்டுல படுத்தப்ப அவகண்ணீர் அந்தபெட்ட நனைச்சிச்சி அதுல இருந்து வந்த வாசம் அவரோடதா இருந்துச்சு அவளால கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியல.




