நீட் தேர்வை எதிர்த்து பல அரசியல் கட்சி தலைவர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மேலும் சமீபத்தில் நடத்தப்பட்ட நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் பெரும் சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் நீட் தேர்வினை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக மாணவர் அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி பேசியது சர்சையை ஏற்படுத்தி உள்ளது,ஆர் எஸ் பாரதி பேசியது “நான் படித்த போது பிஏ படித்தாலே போர்டு வைத்துக் கொள்வார்கள். தற்பொழுது நாய்கூட பி.ஏ பட்டம் வாங்குகிறது. பட்டப்படிப்புகள் என்பது திராவிட இயக்கப் போட்ட பிச்சை. சாதிவாரி ஒதுக்கீட்டினால் தான் எங்களில் பலர் மருத்துவர்கள் ஆனார்கள்.
எங்கள் பட்டப்படிப்புகள் குலம் கோத்திர பெருமையால் வரவில்லை. எல்லாரும் பட்டம் பெறுவதை தடுப்பதற்கு தான் நீட் போன்ற தேர்வுகள் வந்துள்ளது. மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் தைரியம் எனக்கு உள்ளது’’, என அவர் பேசி உள்ளார்.
ஆர்ப்பாட்டத்தில் நாய் கூட பிஏ பட்டம் வாங்குகிறது என்று ஆர் எஸ் பாரதி பேசியது தற்பொழுது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. அவருடைய பேச்சுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.