
பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்து..உடல் கருகி 3 பேர் பலி..!! கர்நாடகாவில் பரிதாபம்…
கர்நாடகாவில் உள்ள ஹாவேரி மாவட்டத்தை சேர்ந்தவர் குமார். இவர் ஊருக்கு ஒதுக்கு புறமான பகுதியில் பட்டாசு கிடங்கு ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். அந்த பட்டாசு கடையில் பண்டிகை நாட்களில் சிவகாசியில் இருந்து பட்டாசுகளை வாங்கி வந்து விற்பனை செய்து வருவார். அதன்படி குமார் வருகிற விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு சிவகாசியில் இருந்து ஒன்றரை கோடி ரூபாய்க்கு பட்டாசுகளை வாங்கி வந்து தனது கிடங்கில் வைத்திருந்தார்.
இந்த நிலையில் பட்டாசு கிடங்கின் மாடியில் நேற்று வெல்டிங் பணி நடைபெற்றுள்ளது. இந்த பணியில் அதே பகுதியைச் சேர்ந்த வாசிம் ஹரிகர் என்ற தொழிலாளி ஈடுபட்டிருந்தார். அப்போது தீப்பொறி சில பட்டாசுகள் மீது விழுந்துள்ளது. இதில் பட்டாசுகள் தீப்பிடித்து எரிந்து வெடித்து சிதறியுள்ளன.
இதனை பார்த்து சுதாரித்துக் கொண்ட வாசிம் ஹரிகர் மாடியிலிருந்து கீழே குதித்து லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்த தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமும் நெருப்புமாக காட்சி அளித்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பல மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீ கட்டுக்குள் வந்தது.
இதனை அடுத்து தீயணைப்புத் துறையினர் தீ விபத்தில் தொழிலாளர்கள் யாராவது பலியாகியுள்ளனரா? என்று உள்ளே சென்று பார்த்துள்ளனர் அப்போது காடேனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த திம்மப்பன் ஒலேகாரா, ரமேஷ் பார்கி, சிவலிங்கா அக்கி உள்ளிட்ட மூன்று பேர் தீயில் சிக்கி கருகி பிணமாக கிடந்துள்ளனர். அவர்களது உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதன் பின்பு இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கிடங்கு உரிமையாளரான குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.