
- பணியில் இருக்கும் போது தற்கொலை செய்துகொண்ட ராணுவ வீரர் – விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம் அருகே கீழக்கரந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் மணித்துரை. கடந்த 2015-ம் ஆண்டு முதல் ராணுவத்தில் பணியாற்றி வந்த இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பணியில் இருக்கும் போது ராணுவ அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதால், சம்பவம் தொடர்பாக ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், மணித்துரை தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது தாய் கனக வேலம்மாளை செல்போனில் அழைத்துப் பேசியுள்ளார்.
அப்போது, மணித்துரை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தான் பணம் இழந்தது குறித்தும், அதற்காக பலரிடம் பணம் வாங்கி உள்ளதாகவும், ஊருக்கு வரவே விருப்பம் இல்லை என்றும் இனி வாழ விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இரண்டு முறை துப்பாக்கி சத்தம் கேட்டதும் நான் இறந்து விட்டதாக நினைத்துக் கொள் என்றும் அதுவரை என்னோடு பேசு அம்மா” என்று பேசியுள்ளார்.
அப்போது பேசிக்கொண்டிருக்கும் போது இரண்டு முறை துப்பாக்கி சத்தம் கேட்டது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தாய் கதறியழுதுள்ளார். இந்த நிலையில், ராணுவ வீரர் மணித்துரையின் உடல் இன்று அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு எரியூட்டப்பட்டது.
கடந்த கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மணித்துரையின் தந்தை வேலுச்சாமி விபத்தில் உயிரிழந்த நிலையில், தற்போது மணித்துரையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த குடும்பத்தை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.