ஒரு நாட்டின் தட்பவெப்பத்துக்கு ஏற்ற உணவுதான் அங்கே வாழ்கிற மக்களுக்கான சரியான உணவு. அந்த வகையில் வெப்பம் மிகுந்த நம் நாட்டில் காலை உணவை குளிர்ச்சியாகத் தொடங்குவதே நல்லது. அதற்கு பழைய சாதம் சரியான தேர்வு என்று சொல்லலாம். பழைய சோற்று தண்ணீரை அதிகாலையில் வெறும் வயிற்றில் அருந்தினால் உடல் குளர்ச்சி அடைந்து பசியைத் தூண்டும்.
இரவில் நீர் ஊறிய சோற்றை அந்த நீரோடு அருந்தினால் ஆண்மை பெருகும், தேகத்தில் ஒளி உண்டாகும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பழைய சோற்றுடன் மோர் கலந்து சாப்பிட்டால் உடல் எரிச்சல், பித்தம், பிரம்மை நோய்கள் நீங்கும். செரிமான பிரச்னைகள் இருப்பவர்கள் காலையில் முதல் உணவாக பழைய சோற்றினை எடுத்துக்கொள்வது நல்லது. செரிமான சக்தி கூடுவதற்கு இது உதவும். பழைய சோறு 12 மணி நேரம் ஊறியதாக இருக்க வேண்டும்.அப்போதுதான் முறையான நொதித்தல் ஏற்பட்டு உடலுக்கு நன்மை பயக்கக்கூடிய பாக்டீரியாக்கள் அதிகமாகத் தோன்றும்.
பழைய சோற்றுக்கு சின்ன வெங்காயம்தான் சரியான ஜோடி. சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிடும்போது பித்த, வாத நோய்கள் நீங்கும். எனவே, பழைய சோற்றினை 4 வயது குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடலாம். காலையில் பழைய சோற்றில் மோர் கலந்து சாப்பிட்டால் தூக்கம் வரும் என்பதால் வேலைக்குச் செல்பவர்கள் தயிர்/மோர் இல்லாமல் எடுத்துக் கொள்ளலாம்.
பொதுவாக பழைய சோற்றை சளி, இருமல் போன்ற தொந்தரவுகள் இருக்கும் சமயத்திலும், உடலுக்கு குளிர்ச்சி தேவையில்லை என்கிற சமயத்திலும் தவிர்த்துவிடலாம். குக்கரில் சமைத்த சாதத்தில் இருந்து பழைய சோறு தயார் செய்வதையும், பழைய சோற்றினை ஃபிரிட்ஜில் வைத்தும் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். இயற்கை யான தட்பவெட்ப நிலையில்தான் பழையசோறு ஊட்டச்சத்துமிக்க உணவாக மாறும். சோற்றினை ஊற வைக்கும்போது மண் பானையில் ஊற வைப்பது இன்னும் நல்லது. மண்பானையில் இயற்கையாகவே உணவின் சத்துக்களைப் பாதுகாக்கும் தன்மை இருக்கிறது. வெப்பம் பாதிக்காமல் உணவை குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும்’’ என்கிறார் சத்திய ராஜேஷ்வரன்.
பழைய சாதத்தில் இருக்கும் சத்துக்கள் பற்றி உணவியல் நிபுணர் உத்ராவிடம் கேட்டோம்.‘‘ஒரு நாள் உணவுப்பழக்கத்தில் காலை உணவு என்பது மிகவும் முக்கியமானது. அந்த முக்கியமான உணவுக்கு உகந்தது என்று பழைய சாதத்தைச் சொல்லலாம். ஒரு கப் பழைய சாதத்தில் 160 கலோரிகள் அடங்கியிருக்கிறது. இத்துடன் சோடியம், பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மக்னீசியம் போன்ற தனிமங்கள், கனிமப் பொருட்கள் அடங்கியுள்ளன. பி 6 மற்றும் பி 12 வைட்டமின்களும் நிறைந்துள்ளது. இரவு முழுவதும் சாதத்தை ஊறவிடும்போது லாக்டிக் அமில பாக்டீரியா, நன்மை பயக்கக்கூடிய உயிர்ச்சத்துக்கள் ஆகியவை உருவாகின்றன.பழைய சோற்றுடன் மோர்,வெங்காயம் மட்டும் எடுத்துக்கொள்ளாமல் காய்கறி அவியல், தேங்காய் துவையல், கறிவேப்பில்லை, புதினா, கொத்துமல்லி துவையல் ஆகியவை எடுத்துக்கொள்ளலாம். இதனால் முழுமையான ஊட்டச்சத்து கிடைக்கும். பழைய சோற்றை நீண்ட நேரம் வைத்திருந்து சாப்பிடுவது ஆரோக்கியமானது அல்ல. வாந்தி, மயக்கம், வயிற்றுக் கோளாறு உள்ளிட்ட ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனால், நீண்ட நேரமானதைத் தவிர்த்துவிடலாம்’’ என்கிறார்.