
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற பிப்ரவரி மாதம்-27 தேதி நடைபெற உள்ள நிலையில் அங்கு பதிவாகும் வாக்குகள் வரும் மார்ச் மாதம் 2-ம் தேதி எண்ணப்பட உள்ளது.
இந்நிலையில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் அணியின் சார்பில் செந்தில் முருகன் என்பவரை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் தென்னரசு வேட்பாளராக அறிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இது வரை சுயேட்சை வேட்பாளர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்த நிலையில் நேற்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இன்று காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.மேலும் அதிமுக வேட்பாளர் கே எஸ் தென்னரசு இன்று வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி நாளான வருகின்ற பிப்ரவரி 7ஆம் தேதி அவர் வேட்புமனு தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் எடப்பாடி பழனிச்சாமி திடீரென சந்தித்த நிலையில் வேட்புமனு தாக்கல் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.