
பிரதோஷ விரதம் மற்றும் வழிபாடு சைவ மக்களால் கடைபிடிக்கப்படும் சிவ விரதங்களில் முக்கியமான ஒன்றாகும். இது ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை ஆகிய இரண்டு திதிகளில் நிகழும். சூரியன் மறைவதற்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் பின் மூன்றே முக்கால் நாழிகையும் உள்ள காலமே பிரதோஷம் எனப்படும். இந்த நேரத்தில் சிவபெருமானுக்கும் நந்தி தேவருக்கும் சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெறும்.
பொதுவாக மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரையே பிரதோஷ நேரம் என்று குறிப்பிடுவார்கள். பிரதோஷ தினத்தன்று காலையில் எழுந்து நீராடி அன்றைய தினம் விரதம் இருக்க வேண்டும். மாலை நேரத்தில் சிவாலயங்களுக்கு சென்று சிவாய நம என்று ஐந்து எழுத்து மந்திரத்தை மனம் உருகி ஜெபிக்க வேண்டும். அன்றைய தினம் முழுவதும் திருமுறையை படித்தால் கூடுதல் சிறப்பு.
பிரதோஷ தினத்தன்று உணவருந்தாமல் விரதம் இருந்து சிவாலயங்களுக்கு செல்லும்போது அங்கு சிவனுக்கும் நந்தி தேவர்க்கும் அபிஷேகத்திற்கு ஒரு சில பொருட்களை வாங்கி கொடுப்பது சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது. அது என்னவென்றால், சிவனுக்கு தூய நல்லெண்ணெய் வாசனை திரவியங்கள் கலந்து அபிஷேகத்துக்கு கொடுத்து வந்தால் நோயற்ற வாழ்வு நமக்கு கிடைக்கும். சுத்தமான பசும்பாலில் அபிஷேகம் செய்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும். சுத்தமான தேன் கொண்டு அபிஷேகம் செய்தால் வாழ்வில் செல்வம் பெருகும். சர்க்கரை கொண்டு அபிஷேகம் செய்தால் மன நிறைவு உண்டாகும்.
முக்கியமாக சனிக்கிழமைகளில் நிகழும் பிரதோஷ திதி மிகவும் சிறப்பானதாகும். அன்றைய தினம் சிவபெருமானையும் நந்தி தேவரையும் வழிபடுவதால் சகல விதமான தோஷங்களும், பாவங்களும் துன்பங்களும் நீங்கும் என்பது ஐதீகம். பிரதோஷங்களில் சனிக்கிழமை வரும் பிரதோஷத்தை மகா சனி பிரதோஷம் என்றும் கூறுவர். பிரதோஷம் அன்று விரதம் இருந்து சிவாலயங்களுக்கு சென்று சிவனை தரிசித்து விட்டு வீட்டிற்கு வந்த பிறகு தான் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.