பீட்ரூட்டில் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் இந்த பீட்ரூட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கட்டாயம் தன் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் சில குழந்தைகள் பீட்ரூட் சாப்பிட அடம் பிடிப்பது வழக்கமாக வைத்துள்ளனர். அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு பீட்ரூட்டை சற்று வித்தியாசமாக பிரியாணி வைத்து கொடுக்கும் பொழுது பிரியாணியின் சுவையில் மெய்மறந்து சாப்பிட்டு விடுவார்கள். பீட்ரூட் பிரியாணி செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ…
ஒரு குக்கரில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பெருஞ்சீரகம், பிரியாணி இலை, அண்ணாச்சி பூ சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக காரத்திற்கு ஏற்ப இரண்டு முதல் நான்கு பச்சை மிளகாய், ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி கொள்ள வேண்டும். நீளவாக்கில் நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் நீளவாக்கில் பொடியாக நறுக்கிய இரண்டு பழுத்த தக்காளி பழம் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். தக்காளி வதங்கும் நேரத்தில் மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம்.
ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி கல் உப்பு, இரண்டு தேக்கரண்டி பிரியாணி மசாலா சேர்த்து ஒரு முறை நன்கு வதக்கி கொள்ள வேண்டும். அடுத்ததாக நாம் நறுக்கி வைத்திருக்கும் பீட்ரூட் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு கப் அளவு பீட்ரூட் சேர்ப்பதற்கு ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள் என்பது அளவு.
எண்ணெயோடு சேர்த்து பீட்ரூட் நன்கு வதங்கும் வரை ஒரு முறை வதக்கிக் கொள்ளவும். அடுத்ததாக ஒரு கப் வெட்டி தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது நாம் எடுத்துக் கொண்ட அரிசிக்கு ஏற்ப தண்ணீர் வைத்துக் கொள்ளலாம்.
அதாவது ஒரு கப் பாஸ்மதி அரிசிக்கு ஒன்றரை கப் அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன்படி தண்ணீர் சேர்த்து மீண்டும் ஒருமுறை உப்பு சரிபார்த்துக் கொள்ளலாம்.
தண்ணீர் கொதித்து வரும் நேரத்தில் அரை மணி நேரம் ஊற வைத்திருக்கும் பாஸ்மதி அரிசி, பொடியாக நறுக்கிய கைப்பிடி அளவு புதினா மற்றும் மல்லி இலை சேர்த்து கலந்து கொடுத்து குக்கரை மூடி விட வேண்டும்.
மூன்று விசில்கள் வரும் வரை மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். விசில்கள் வந்தபின் அழுத்தம் குறைந்தவுடன் திறந்து இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து கிளற வேண்டும்.
இப்பொழுது சுவையான பீட்ரூட் பிரியாணி தயார். பிரியாணிக்கு தயிர் வெங்காயம், கத்திரிக்காய் வைத்து சாப்பிடும் பொழுது மிக அருமையாக இருக்கும்.