
ஓய்வுக்குப் பிறகு ஊழியர்களுக்கு நிதி பாதுகாப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு மத்திய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை (UPS) அறிவித்தது. மேலும், இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் நிலையில், இத்திட்டத்தில் சில முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, NPS திட்டத்தின் கீழ் இருக்கும் மத்திய அரசு ஊழியர்களும், வரும் காலங்களில் மத்திய அரசு பணியில் சேரும் ஊழியர்களும் UPS திட்டத்தை தேர்வு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த “புதிய ஓய்வூதிய திட்டத்தில் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணிபுரிந்த ஒரு அரசு ஊழியருக்கு முந்தைய 12 மாதங்களில் பெற்ற சராசரி அடிப்படை ஊதியத்தில் 50% தொகை ஓய்வூதியமாக வழங்கப்படும். இதுவே 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் இருக்கும் ஊழியர்களுக்கு மாதந்தோறும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.10,000 வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,” ஊழியர் பணியில் இருந்து நீக்கப்பட்டாலோ அல்லது ராஜினாமா செய்திருந்தாலோ இத்திட்டத்தின் மூலம் ஓய்வூதியம் கிடைக்காது என்றும், UPS ஐ தேர்ந்தெடுத்த ஊழியர், வேறு ஓய்வூதிய திட்டத்திற்கு மாற முடியாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.