புரட்டாசி மாதங்களில் அசைவம் சாப்பிட முடியாமல் தத்தளிக்கும் அசைவ பிரியர்களுக்கு இந்த குழம்பு ரெசிபி மிகவும் உதவியாக இருக்கும். அசைவம் சாப்பிடும் அதே சுவையில் சைவத்தில் விதவிதமாக செய்து சாப்பிட்டு மாதம் முழுக்க சைவ விருந்து கொண்டாடலாம் வாங்க. அந்த வகையில் அசைவ குழம்பிற்கு இணையாக செட்டிநாடு பக்கோடா குழம்பு நம் வீட்டில் செய்வதற்கான ரெசிபியை பார்க்கலாம்…
குழம்பு செய்வதற்கு 200 கிராம் கடலைப்பருப்பு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக நன்கு கழுவி சுத்தம் செய்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் ஒருமுறை கழுவி சுத்தம் செய்து இதனுடன் ஒரு சிறிய துண்டு இஞ்சி 2, வெள்ளைப் பூண்டு ஐந்து, காய்ந்த வத்தல் இரண்டு, அரை தேக்கரண்டி சோம்பு, அரை தேக்கரண்டி சீரகம், அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
மாவு அரைக்கும் பொழுது மையாக அரைத்துக் கொள்ளாமல் சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொண்டால் சுவையாக இருக்கும். அப்படி மாவு தயார் செய்த பிறகு ஒரு அகலமான கடாயில் பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக மாற்றி பக்கோடா போல பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து மற்றொரு கடாயில் மூன்று தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் இரண்டு துண்டு பட்டை, இரண்டு துண்டு கிராம்ப, இரண்டு துண்டு ஏலக்காய், அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம், சிறிதளவு கல்பாசி சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
இதை அடுத்து பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், 10 முதல் 15 சின்ன வெங்காயம், 10 பல் வெள்ளை பூண்டு, , கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கும் நேரத்தில் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.
இஞ்சி பூண்டு விழுதுவின் பச்சை வாசனை சென்றவுடன் நன்கு பழுத்த இரண்டு தக்காளி பழத்தை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து விழுதுகளாக மாற்றிக் கடாயில் சேர்த்துக் கொள்ளலாம்.
தக்காளி பழத்தின் பச்சை வாசனை சென்றவுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி மல்லித்தூள், ஒன்றரை தேக்கரண்டி கறி மசாலா தூள் சேர்த்து மசாலா வாசனை செல்லும் வரை வதக்கி கொள்ள வேண்டும்.
இதனுடன் அரை தேக்கரண்டி உப்பு, தேவையான அளவு தண்ணீர் கலந்து கொதிக்க விட வேண்டும். மிதமான தீயில் மசாலாக்கள் கொதிக்கும் நேரத்தில் குழம்பிற்கு தேவையான அளவு தேங்காய் மசாலாவை தயார் செய்து கொள்ளலாம்.
அதற்காக ஒரு கப் தேங்காய் துருவல், அதை அரை தேக்கரண்டி சோம்பு, அரை தேக்கரண்டி கசகசா சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். குழம்பு மேலும் கெட்டியாக வரவேண்டும் என நினைத்தால் தேங்காய் அரைக்கும் பொழுது இதனுடன் முந்திரி பருப்பு அல்லது பொரிகடலை சேர்த்து அரைத்து குழம்பு கெட்டியாக இருக்கும்.
குழம்பிலிருந்து நல்ல கொதி வந்த நேரத்தில் நாம் அடைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதுகளை சேர்த்து மீண்டும் ஒரு இரண்டு முதல் மூன்று நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். மூன்று நிமிடம் கழித்து நாம் பொரித்து வைத்திருக்கும் உருண்டைகளை குழம்பில் சேர்த்துக் கொள்ளலாம்.
பொறித்து வைத்திருக்கும் பக்கோடா உருண்டைகளை சேர்த்த பிறகு ஒரு நிமிடத்தில் அடுப்பை அணைத்து விடலாம். இறுதியாக கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான பக்கோடா குழம்பு தயார்.