மத்திய அரசானது நாட்டில் உள்ள பெண்களின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு வகையான நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், சுய தொழில் தொடங்கும் பெண்களுக்கு மத்திய அரசின் மானியத்துடன் கடன் உதவி வழங்கும் திட்டமானது மக்களிடம் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. அது என்ன திட்டம்? அதை எப்படி பெறுவது? மற்றும் அதன் முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.
விண்ணப்பிக்க தகுதியானவர்கள்:
அதாவது, “உத்யோகினி” என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி அதன் மூலம் தொழில் தொடங்கும் பெண்களுக்கு ரூ. 3 லட்சம் வரை கடன் உதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தில் 18 முதல் 55 வயது வரை உள்ள பெண்கள் சேரலாம். மேலும், இத்திட்டத்தில் கடன் பெற விரும்பும் பெண்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இதில் கிராமப்புற பெண்களுக்கு அதிக அளவில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் விவசாயம் செய்யும் பெண்களுக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும், இதில் சேரும் பெண்களுக்கு இலவச சிறப்பு தொழில் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகளும் வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
உத்யோகினி திட்டத்தில் சேர எந்த ஒரு உத்திரவாத ஆவணமும் சமர்ப்பிக்க தேவையில்லை. ஆனால், முன்பு ஏதேனும் ஒரு திட்டத்தில் கடன் வாங்கி இருக்கும் பட்சத்தில், அதனை சரியான நேரத்தில் கட்டாயம் செலுத்தி இருத்தல் வேண்டும். மேலும், இதில் சேர விரும்பும் பெண்கள் அருகில் உள்ள பொதுத்துறை வங்கி அல்லது வணிக வங்கிகளுக்கு சென்று ஆதார் அட்டை, பாஸ்போர்ட் போட்டோ, முகவரி சான்றிதழ், வருமான சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் சாதி சான்றிதழ், ரேஷன் அட்டை, PPL அட்டை மற்றும் பாஸ் புக் உள்ளிட்டவற்றின் நகலை கொண்டு சென்று விண்ணப்பிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால், இ-சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.