
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் பணிகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நிலையில், இதற்கான விண்ணப்பப் படிவம் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகையாக வழங்கப்படும் என்பது திமுக வாக்குறுதியாகவே இருந்தது. பின்னர், திமுக ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இத்திட்டம் குறித்து பலரும் கேள்வி எழுப்பினர். ஏற்கனவே, செப். 15ஆம் தேதி முதல் இந்தத் திட்டம் தொடங்கப்படும் என்று இந்தாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே, நேற்று மாவட்ட ஆட்சியர்களுடன் இத்திட்டம் குறித்து முதல்வர் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து இத்திட்டத்தில் யாரெல்லாம் வருவார்கள், யாரெல்லாம் தகுதி பெற மாட்டார்கள் என்பது குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இதற்கிடையே, மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பப் படிவம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் ஆதார் எண், பெயர், குடும்ப அட்டை எண் உட்பட 13 வகையான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. மேலும், 18 வயதிற்கு மேல் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன.
மேலும், சொந்த வீடு இருக்கிறதா, சொந்த பயன்பாட்டிற்காக கார்/ ஜீப்/ டிராக்டர் உள்ளதா என்ற கேள்விகளும் கேட்கப்பட்டுள்ளன. மேலும், மாதந்தோறும் ரூ.1000 நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்பதால் வங்கிக் கணக்கு குறித்த விவரங்களையும் கேட்டுள்ளனர். ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ்புக் ஆவணங்கள் தேவை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், உறுதிமொழி என தனியாக 11 பாயிண்டுகள் உள்ளது. அதில் ஆதார் தகவல்கள் எடுத்துக் கொள்ள அனுமதிப்பது, ஆண்டு வருமானம் உள்ளிட்டவை அரசு அறிவித்த வழிகாட்டுதல்கள் படியே இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்குக் கீழ் விண்ணப்பிக்கும் பெண்கள் கையெழுத்திட வேண்டும்.
செப். 15ஆம் தேதி முதல் இந்தத் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. ஒருவர் பணி உள்ளிட்ட காரணங்களால் வேறு ஒரு இடத்திற்கு வந்திருந்தாலும், அவர்கள் ரேஷன் அட்டையில் இருக்கும் இடத்திற்கு சென்று தான் விண்ணப்பிக்க வேண்டும் என்பதையும் தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், யாரெல்லாம் இதற்குத் தகுதி பெறுவார்கள் என்பது குறித்தும் பல நிபந்தனைகளைத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்திற்கும் மேல் இருக்கக்கூடாது. அரசுப் பணியில் உள்ளவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெற முடியாது. மேலும், சொந்த பயன்பாட்டிற்காக கார், ஜீப், டிராக்டர் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்கள் வைத்திருப்போரும் விண்ணப்பிக்க முடியாது. ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் மேல் விற்பனை செய்து ஜிஎஸ்டி செலுத்தும் தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் இதில் விண்ணப்பிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.