பெண்கள் வயதுக்கு வரும் அறிகுறிகள் யாவை?
* பருவமடையப் போவதன் அல்லது அடைந்து விட்டதன் முதல் அறிகுறியாக ஒரு பெண்ணுக்கு மார்பக வளர்ச்சி படிப்படியாக அதிகரிக்க ஆரம்பிக்கும்.
* அக்குள், அந்தரங்க உறுப்புகளில் ரோம வளர்ச்சி தென்படும்.
* சில பெண்களுக்கு முகம், நெற்றி மற்றும் முதுகில் பருக்கள் வரலாம்.
* மாதவிடாய் அதாவது, உதிரப் போக்கு வரத் தொடங்கும்.
* முதல் மாதவிலக்கு வந்ததை அடுத்து பெண்களின் உயரமும் கிடுகிடுவென அதிகரிப்பதைப் பார்க்கலாம். 2 முதல் 3 வருடங்களில் அவர்களது உயரத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.
மேலே சொன்ன அறிகுறிகள் பருவ வயதில் இருக்கிற எல்லாப் பெண்களுக்கும் பொதுவானவை. அதே நேரம் முதல் மாதவிலக்கும் அதையடுத்த அவர்களது சுழற்சியும் எல்லோருக்கும் ஒன்று போல இருக்காது. இந்த வித்தியாசம் பெண்களின் பூப்பெய்தும் வயது, மாதவிடாயின் போதான ரத்தப் போக்கு, அது நீடிக்கும் நாட்கள் என எல்லாவற்றிலும் இருக்கலாம்.
10 முதல் 14 வயது என்பது பெண்கள் பூப்பெய்தும் வயது என்பது பொதுவான விதி. ஆனாலும், இது ஒவ்வொருவருக்கும் கூடவோ, குறையவோ செய்யலாம். உதாரணத்துக்கு சில பெண்கள் 7 அல்லது 8 வயதில் கூட பூப்பெய்தலாம்.
அந்த நிலையை Precocious Puberty என்கிறோம். இன்றைய உணவுப் பழக்கம், வாழ்க்கைமுறை, இளவயது மன அழுத்தம் எனப் பல விஷயங்களின் காரணமாக பெண் குழந்தைகளின் பூப்பெய்தும் வயதானது குறைந்து விட்டது உண்மைதான். ஆனாலும், 7 வயதுக்கு முன்பாகவே ஒரு பெண் குழந்தைக்கு பருவமடைதலின் அறிகுறிகள் தென்பட்டால், மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.
இன்னும் சில பெண்களுக்கோ பூப்பெய்தும் வயது வழக்கத்தைவிட தள்ளிப் போகலாம். பெரும்பாலும் விளையாட்டு வீராங்கனைகளுக்கு இந்தப் பிரச்சனை இருப்பதைப் பார்க்கலாம். 14 வயதுக்கு மேலும் பூப்படையாத பட்சத்தில் மருத்துவப் பரிசோதனையும் ஆலோசனையும் அவசியம். பூப்படையாததற்கு வேறு ஏதேனும் உடல்நலக் கோளாறுகள் காரணமா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். மிக மிக அரிதாகவே இது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன என்பதால் பயப்படத் தேவையில்லை.
பூப்பெய்திய பெண் குழந்தைகளின் விஷயத்தில் முதலில் கண்காணிக்க வேண்டியது உடல் எடையைத்தான். பெண் குழந்தைகள் பூப்பெய்தியதும் ‘சத்துள்ள உணவாகச் சாப்பிட வேண்டும்’ என்று நினைத்துக் கெட்ட கொழுப்பு, கார்போஹைட்ரேட் அடங்கிய உணவுகளை அளவுக்கு மீறிச் சாப்பிடக்கொடுக்கிறார்கள். இதனால் சரியான எடையைப் பராமரிக்க முடியாமல், உடல் பருமன் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் எடை அதிகரிப்பதால், மாதவிடாய் தள்ளிப்போவது, தைராய்டு போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
மேலும் உடல் பருமனால் கருமுட்டை வளர்ச்சிக்குத் தேவையான ஃபாலிக்கில் ஸ்டிமுலேட்டிங் (Follicle Stimulating) மற்றும் லியூட்டினைஸிங் (Luteinizing) என்ற இரு ஹார்மோன்களும் பாதிக்கப்படும். இந்த இரண்டு ஹார்மோன்களும் பாதிக்கப்படுவதால் கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் (PCOS) உருவாகி, பிற்காலத்தில் தாய்மை அடைவதும் கேள்விக்குறியாகும்.
எனவே, ஒரு பெண் குழந்தை பூப்பெய்தியதும் உடலுக்குத் தேவையான அளவு மற்றும் ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட வேண்டியவது அவசியம்.




