
சீனாவின் தலைநகரான பெய்ஜிங் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 140 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு கனமழை பெய்துள்ளது. அதனை அடுத்து 20 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளதாகவும் 27 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெய்ஜிங் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகின்றது. கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பதிவாகி இருக்கிறது. கடந்த சனிக்கிழமை முதல் புதன்கிழமை வரை பெய்ஜிங் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 744.8 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக பெய்ஜிங் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்சீன மாகாணங்களை தாக்கிய டோக்சூரி சூறாவளி, வடக்கு நோக்கி நகர்ந்ததால் வட சீனாவில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் பெய்ஜிங் மற்றும் அதை சுற்றியுள்ள ஹெபெய் மாகாணம் கடுமையான வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. மழையால் சாலைகள் சேதம் அடைந்துள்ளதாகவும் மின்சாரம் மற்றும் குடிநீர் சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
ஹெபெய் மாகாணத்தின் சிறிய நகரான ஜுவோஜோ கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இங்கு ஏராளமான மக்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் எத்தனை பேர் என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.