
ஜூலை மாதம் தொடங்கி இருக்கும் நிலையில் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டிய 5 நிதி விஷயங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
வருமான வரி கணக்கு (ITR) சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு:
2023-24 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி அறிக்கையை (ITR) தாக்கல் செய்ய ஜூலை 31 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். அதன் பின் டிசம்பர் 31 ஆம் தேதி வரை தாமத கட்டணம் ரூ. 5000 ( 5 லட்சத்துக்கும் அதிகமான வருமானம்) அல்லது ரூ. 1000 (5 லட்சத்துக்கும் குறைவான வருமானம் இருந்தால்) செலுத்தி வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யலாம்.
பான்-ஆதார் இணைப்பு:
மக்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்க காலக்கெடு ஜூன் 30 உடன் முடிவடைகிறது. மேலும் இதுவரை பான் மற்றும் ஆதார் இணைக்கப்படாத நபர்கள் தங்கள் ஐடிஆரைத் தாக்கல் செய்யலாம். அப்படி செய்யாமல் இருந்தால் பான் கார்டு செயல்படாது.
அதிக EPFO ஓய்வூதியத்திற்கான வாய்ப்பு:
செப்டம்பர் 1, 2014க்கு முன் இணைந்த EPFO உறுப்பினர்கள், அதிக ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டவர்களுக்கு ஜூலை 11 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பணம் அனுப்பும் வரி:
வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பணத்திற்கு வரியை 5% லிருந்து 20% ஆக அரசாங்கம் உயர்த்தியுள்ளது. இந்த திருத்தப்பட்ட விதிமுறை அக் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது.
சிறுசேமிப்புத் திட்டங்களின் மீதான வட்டி விகிதங்கள்:
2023 ஜூலை-செப்டம்பர் காலாண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்தத் திருத்தத்தில் தேசிய சேமிப்புச் சான்றிதழின் (NSC) வட்டி விகிதம் அதிகபட்சமாக 70 அடிப்படைப் புள்ளிகள் (bps) அதிகரிக்கப்பட்டுள்ளது. மற்ற திட்டங்களான 1- மற்றும் 2-ஆண்டு போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் மற்றும் 5-ஆண்டு ரெக்கரிங் டெபாசிட் போன்றவையும் வட்டி விகிதங்கள் அதிகரித்துள்ளன.