
பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையம் ஊராட்சி சங்கோதி பாளையத்தில், கோடங்கி பாளையம் ஊராட்சி மன்றம், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் மகிழ்வனம் என்ற பூங்காவை அமைத்து சுமார் 4000த்திற்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் தேசிய மருத்துவர்கள் தினத்தினை முன்னிட்டு மகிழ்வனம் பூங்காவில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. கோடங்கிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் காவி. பழனிச்சாமி தலைமை வகித்தார். செயலாளர் சோமு என்கிற பாலசுப்ரமணியம், முன்னிலை வகித்தார். பொருளாளர் பூபதி வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவை ராயல் கேர் மருத்துவ குழுமத்தின் தலைவர் மாதேஸ்வரன் மரக்கன்றுகள் நட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் விஷ்ணு இன்ஸ்பெரா நிறுவனங்களின் தலைவர் செல்வராஜ், தாய்மண் அறக்கட்டளை தலைவர் பாலசுப்ரமணியம், மற்றும் மகிழ்வன பூங்கா உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.