சென்னையில் தாறுமாறாக ஓடிய கார் மோதி வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் .மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மதன் (வயது 30) என்பவர் சென்னை வெட்டுவாங்கேணி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள டீக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் அப்பகுதியில் சாலை ஓரத்தில் நின்று செல்போன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக திருவான்மியூரை நோக்கி வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதில் சாலையோரம் நின்று கொண்டிருந்த மதன் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் அப்பகுதியில் கொடிக் கம்பம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த சங்கர் என்பவர் மீது கார் மோதியுள்ளது.அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த மதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த விபத்தை ஏற்படுத்திய காரில் வந்த தியாகராய நகரை சேர்ந்த அன்பரசன் மற்றும் அவருடன் வந்த அவர்களது நண்பர்கள் உட்ப ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து விசாரணையில் காரை ஓட்டி வந்த அன்பரசன் மது குடித்து இருந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.