மனிதன் என்று ஒருவன் இருக்குமிடம் எங்கும் காமம் என்று ஒன்று இருந்தே தீருகிறது. அது ஆண்மை பெண்மை இரண்டையும் சோதிக்க ஆண்டவன் நடத்தும் லீலை.
உடல் உணர்வு அல்லது பாலுணர்ச்சி என்பது மேலோங்கிய நிலையிலேயே உலகத்தின் பாவங்கள் அதிகரித்தன.
நமது இதிகாசங்கள் புராணங்கள் மட்டுமல்லாது வரலாறும் அதையே குறிக்கிறது. சரிந்து போன சாம்ராஜ்யங்கள் பலவற்றிற்கு காமமே முதல் காரணமாக இருக்கிறது.
தலைமறைவாக இருந்த கொள்ளைக்காரர்கள் புரட்சிக்காரர்களில் பலர் தம்மை மறந்த நிலையில் பிடிபட்டதற்கும் காமமே காரணமாக இருக்கிறது.
சராசரி மனித வாழ்வில் பசி, காமம் இரண்டும் தவிர்க்க முடியாதவை. கட்டுப்பாடாக அதை தவிர்த்தவர்களுக்கு பெயரே ஞானிகள்.
உடல் வற்றி போய் காய்ந்த எலும்பு கூட கிடைக்காமல் பசியோடு அலையும் ஆண் நாய் ஒன்று ஒரு பெண் நாயை கண்டவுடன் பசியையும் மறந்து காம உணர்வு கொள்வதாக ஒரு பாடல் உண்டு.
வடமொழியில் காமம் என்ற வார்த்தைக்கு பாலுணர்ச்சி என்பது மட்டுமல்ல வேறு பல பொருள்களும் உண்டு. முதலில் சன்னியாசிகளில் ஒரு வகையினர் நிர்வாணமாக இருப்பதே இந்த உணர்ச்சியை தவிர்க்கத்தான்.
பார்ப்பதற்கு அருவருப்பான ஒரு தோற்றத்தை தான் பெற்றிருந்தால் பெண்களுக்கு தன் மீது ஆசை வராது என்பதே அந்த நிர்வாணத்தின் நோக்கம். ஆடை, அணிமணி அலங்காரங்களினால் மூடப்பட்ட உடம்பு சுருதியை தூண்டி விடுகிறது.
அழகாக அலங்கரிக்கப்பட்ட சிகையும் சவரம் செய்யப்பட்ட முகமும் பெண்களின் உணர்ச்சித் தந்தியை மீட்டி விடுகின்றன. ஆகவே அலங்கோலமான உருவத்தை செயற்கையாக தேடிக் கொள்வதே ஜடாமுடி தரிப்பதன் நோக்கம்.
அவர்கள் வெறும் கோவணத்தோடு இருப்பதற்கும் காரணம் அதுதான்.
சகல உணர்வுகளையும் உறவுகளையும் துறந்து விட்ட நிலைக்கு நிர்வாணம் என்பது பெயர்.
அந்தத் துறவு நிலையை உடையவர்களே உலகத்திற்கு உபதேசிக்க முடியும். உணர்ச்சியை தூண்டும் உணவுப் பொருள்களையும் உஷ்ணத்தை அதிகரிக்கும் உணவுப் பொருள்களையும் விலக்கி கடும் குளிரிலும் கூட குளிர்ந்த நீரிலே நீராடி காம உணர்வை அகற்றினர் ஞானிகள்.
ஆண் பெண் உறுப்புகளுக்கு அவர்கள் ஜனனேந்திரியங்கள் என்று பெயர் கொடுத்தார்கள்.
சில உயிர்களுக்கு பிறப்பை கொடுப்பதற்காக மட்டுமே இந்த அங்கங்கள் படைக்கப்பட்டிருப்பதாக அவர்கள் நம்பினார்கள். அதில் ஏற்படுகின்ற சுகத்தை அற்ப சுகம் என்றார்கள்.
தமிழும் கூட அதை சிற்றின்பம் என்றே அழைத்தது.
தசரதனுக்கு 60,000 மனைவியர்.
அவன் மகன் ராமன் ஏகபத்தினி விரதன். அது தசரதன் செயலை குற்றம் சாட்டவில்லை. ஆனால் ராமனின் நடத்தையை புகழ்ந்துரைத்தது.பலதார உறவுக்கு அது நியாயம் கற்பிக்கவில்லை. ஆனால் அனுமதித்தது. அதே சமயம் ஒருதார வாழ்க்கையை உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றி அதை தெய்வீகம் என்றது.
மனித மனத்தின் சபலங்களை அங்கீகரித்து , அதை தட்டிக் கொடுத்து மெது மெதுவாக மீட்பதே அது செய்யும் பணி.
எந்த உணர்ச்சியையும் அது அறுவை சிகிச்சை மூலம் தீர்க்க விரும்பவில்லை. அங்கீகரித்து திருத்தும் நாகரிகத்தை கையாண்டது.
அது காமத்தை ஒருவகை குற்றமாகக் கருதவில்லை. ஆனால் குற்றங்களுக்கு காரணமான காமத்தை அது கதைகளிலே விவரிக்கிறது. காமம் எப்போது பாவமாகிறது என்பதை அது எவ்வளவு அற்புதமாக விவரிக்கிறது.
சாஸ்திரங்களில் ஓரிடத்தில் உடலுக்கு ஏற்ற உறவு எது என்பது கூட கூறப்பட்டிருக்கிறது.
தன்னைவிட 10 வயதுக்கு மேல் அதிகமான ஒரு பெண்ணுடன் ஒருவன் உறவு கொண்டால் அவன் உடம்பு மெலிந்து முகம் களை இழந்து போகிறது.
வயது குறைந்த பெண்ணோடு தொடர்பு கொண்டால் முகம் பிரகாசமடைகிறது.
ஒரு மத சாஸ்திரம் இதை ஏன் விவரிக்க வேண்டும்?
ஒன்று – ஒரு ஆரோக்கியமான உடம்புக்கு பொறுப்பேற்றுக் கொள்வது.
இரண்டு- 10 வயது அதிகமான பெண் குறைந்த வயதுடைய ஆணுடன் தொடர்பு கொள்ள வருகிறாள் என்றால் ஒன்று அவள் கெட்ட நடத்தை உடையவளாக இருக்க வேண்டும் அல்லது இன்னொருவன் மனைவியாக இருக்க வேண்டும் அதை தடுப்பது.
எப்போது காம உணர்ச்சி பாவமாகிறதோ அப்போது தண்டனை கடுமையாகிறது.