ஒரு நாள் மாலை, ஜென் குரு ஷிச்சிரி கோஜுன் சூத்திரங்களை ஓதிக் கொண்டிருந்த போது, திருடன் ஒருவன் கூரிய வாளை ஏந்தியபடி அவரது வீட்டிற்குள் நுழைந்தான். “பணத்தை எடு அல்லது உன் உயிரைக் கொடு” என்று அச்சுறுத்தினான்.
ஷிச்சிரி எவ்வித சலனமும் இல்லாமல், “என்னை தொந்தரவு செய்யாதே! பணத்தை எடுத்துக் கொள், அங்கே பார் அந்த இழுப்பறையில் இருக்கிறது.” என்று கூறி எதுவும் நடக்காதது போல் மீண்டும் பாராயணம் செய்யத் தொடங்கினார்.
இவ்விதமான சற்றும் எதிர்பாராத எதிர்வினையால் திருடன் திடுக்கிட்டான், ஆனாலும் தன் வேலையை தொடர்ந்தான். அவன் பணத்தை அள்ளிக் கொண்டிருந்த போது, குரு ஷிச்சிரி கோஜுன் படித்து கொண்டிருப்பதை சற்று நிறுத்தி, “அதில் இருக்கும் எல்லா பணத்தையும் எடுத்துக் கொள்ளாதே. நாளைக்கு வரி செலுத்த வேண்டும்; கொஞ்சம் மிச்சம் வைத்துவிட்டு போ” என்று கூறிவிட்டு மறுபடியும் படிக்கத் தொடங்கினார்.
திருடன் அவ்வாறே கொஞ்சம் பணத்தை விட்டுவிட்டு கிளம்ப தயாரானான். அவன் வெளியேறி வாயிலை கடக்கும் முன், “நீ எனது பணத்தை எடுத்துக் கொண்டு எனக்கு நன்றி கூட கூறாமல் செல்கிறாயே?! அது நாகரீகமான செயல் அல்ல!” என்று குரு ஷிச்சிரி கோஜுன் உரக்க கேட்டார்.
அத்தகைய பயமின்மையைக் கண்டு இம்முறை திருடன் உண்மையில் அதிர்ச்சியடைந்தான். குரு கோஜுனுக்கு நன்றி கூறி ஓடி விட்டான். பின்னர் திருடன் தனது நண்பர்களிடம் வாழ்க்கையில் எப்போதும் தான் இவ்வளவு பயந்ததில்லை என்று தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டான்.
சில நாட்களுக்குப் பிறகு திருடன் பிடிபட்டான். ஷிச்சிரி உட்பட பலரது வீட்டில் திருடியதை ஒப்புக் கொண்டான்.
குரு கோஜுனை சாட்சியாக அழைத்து விசாரித்த போது, “இல்லையே, இந்த நபர் என்னிடமிருந்து எதையும் திருடவில்லை. நானேதான் விருப்பப்பட்டு அவருக்கு என் பணத்தைக் கொடுத்தேன், அவர் எனக்கு நன்றியும் தெரிவித்தார்” என்று கூறினார்.
திருடன் மனம் நெகிழ்ந்தான். அவன் செய்த தவறுக்கு வருந்தினான். அதற்கு பரிகாரம் செய்ய முடிவெடுத்தான்.
அவன் சிறையிலிருந்து வெளி வந்ததும், குரு ஷிச்சிரி கோஜுனின் சீடரானான். பல ஆண்டுகளுக்குப் பிறகு அவன் ஞானம் பெற்றான்.
நீதி:
பரிவு என்பது உங்கள் சொந்த வலியைத் தாண்டி, மற்றவர்களின் வலியைப் பார்ப்பதாகும். கருணை அல்லது பரிவு காண்பிப்பதற்கு பணம் தேவை இல்லை, ஆனால் அதை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொள்வதால் நமது பூலோகமே வாழ்வதற்கு மகிழ்ச்சியான இடமாக – ஸ்வர்கபூமியாக மாறும். கருணையும் இரக்கமும் இயற்கைக்கும் விலங்குகளுக்கும் கூட காட்டப்பட வேண்டிய ஒன்று. ஏனென்றால் அவ்வாறு நேசிக்கப்படும் போதும், கருணை காட்டப்படும் போதும், கைமாறாக அவையும் அதே இரக்க குணங்களை பிரதிபலிக்கின்றன. அதன்மூலம் அனைவராலும் நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும்.




