மின்சார ரயில் சேவையின் புதிய அட்டவணை வெளியீடு..!!

சென்னை புறநகா் பகுதிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சேவையின் புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் புறநகர் மின்சார ரயில் சேவைகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன.

சென்னை புறநகர் பகுதிகளை இணைப்பதில் மின்சார ரயில் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. சென்னை சென்ட்ரலிலிருந்து ஆவடி, திருவள்ளூா், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூா் பகுதிகளுக்கும், சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு பகுதிகளுக்கும் 5 முதல் 15 நிமிஷங்கள் இடைவெளியில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் மின்சார ரயில் பயணிகளின் வசதிக்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் ரயில் அட்டவணை மாற்றி அமைக்கப்படும். அதன்படி, நிகழாண்டுக்கான புதிய அட்டவணையை சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ளது.

இதில் சென்னை சென்ட்ரல், வேளச்சேரி, சென்னை கடற்கரையிலிருந்து ஆவடி, பட்டாபிராம், அரக்கோணம், திருத்தணி உள்ளிட்ட புறநகர் பகுதிகளுக்கு 128 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்ட நிலையில் தற்போதைய அட்டவணையில் 124-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை முதல் தாம்பரம், செங்கல்பட்டு இடையே 124 ரயில் சேவை இயக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது 8 ரயில்கள் குறைக்கப்பட்டு 116 ரயில்கள் இயக்கப்படும். இந்த வழித்தடத்தில் 8 ரயில்கள் நீக்கப்பட்டு சில ரயில்களின் நேரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரிக்கு தினமும் 70 பறக்கும் ரயில்கள் இயக்கப்பட்டன. இது, திருத்தப்பட்ட ரயில் அட்டவணைப் படி 61 ரயில்களாக குறைக்கப்பட்டன. முன்னதாக, 80 பறக்கும் ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு 70 ரயில்களாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது 61 பறக்கும் ரயில்களாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ரயில்வே அதிகாரி கூறியது: சென்னை புறநகர் மின்சார ரயில் அட்டவணை தற்போதைய பயணிகளின் வசதிக்கேற்ப மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதில் எந்த ஒரு புதிய ரயிலும் அறிவிக்கவில்லை. ஏற்கெனவே இயங்கும் ரயில்களின் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டு சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.

Read Previous

சென்னையில் Gedu குலோபல் எஜுகேஷன் முகவர்கள் கூட்டம்..!!

Read Next

கிராம சுகாதார அலுவலர்களுக்கு பயிற்சி ஆட்சியர் பங்கேற்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular