
கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் அலங்கார மாதா தெருவை சேர்ந்தவர் பனியடிமை(23). தற்போது இவர் அழிக்கால் மேற்கு தெருவை சேர்ந்த, மூத்த சகோதரி அஸ்வினி(31) வீட்டில் தங்கி மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். அஸ்வினியின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மரிய ஷெல்டன்(27). இவர் அடிக்கடி அஸ்வினியை கேலி, கிண்டல் செய்து வந்துள்ளார். இது தொடர்பாக பெரியவர்கள் அவரை எச்சரிக்கை செய்து வந்துள்ளனர். மேலும் பனியடிமையும் அவரை கண்டித்துள்ளார். இதில் அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 27ம் தேதி மரிய ஷெல்டன், அஸ்வினி வீட்டு கதவை தட்டியுள்ளார். அவர் கதவை திறந்தவுடன், அவரை தகாத வார்த்தைகள் பேசி தாக்கியுள்ளார். சப்தம் கேட்டு வெளியே வந்த பனியடிமை இதை தடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மரிய ஷெல்டன் அவரையும் தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த அஸ்வினி, பனியடிமை இருவரும் ராஜாக்கமங்கலம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பனியடிமை வெள்ளிச்சந்தை போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். இதனடிப்படையில் போலீசார் ‘பெண் வன்கொடுமை’ உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.