ரக்ஷாபந்தன் என்பது ஆவணி மாதம் வரக்கூடிய பௌர்ணமி அன்று கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். பெண்கள் தமது சகோதரர்கள் அல்லது சகோதரர்களாக கருதுவோரின் கைகளில் மணிக்கட்டில் மஞ்சள் நூல் கட்டுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சி ஆகும். இதை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஒரு ஆண் அந்த சகோதரியின் பாதுகாப்பிற்கும் வாழ்க்கை நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாக கருதப்படுகிறது. வட இந்தியாவில் பிரபலமாக உள்ள இந்த நிகழ்ச்சி தற்போது தென்னிந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது. ரக்ஷாபந்தன் அன்று கையில் கயிறு கட்டுவதற்கு பின்னால் ஒரு வரலாற்று சிறப்புமிக்க சுவாரஸ்யமான கதை உள்ளது அது என்னவென்று இனி காண்போம்.
மகாபாரதத்தில் பாண்டவர்களின் மனைவியான திரௌபதி போர்க்களத்தில் கிருஷ்ணருக்கு ஏற்பட்ட காயத்தால் வடிந்த ரத்தத்தை தடுப்பதற்காக அவரது புடவையின் ஒரு பகுதியைக் கழித்து அவரின் மணிக்கட்டில் கட்டினார். இதனால் மனமகிழ்ந்த கிருஷ்ணர் திரௌபதியை சகோதரியாக ஏற்றுக்கொண்டு எல்லா துன்பங்களிலிருந்தும் பாதுகாப்பதாக உறுதி அளித்தார். அதேபோல் திரௌபதி ஆடையை களைந்த கௌரவர்களிடமிருந்து கிருஷ்ணர் திரௌபதியை காப்பாற்றினார் அப்படி திரௌபதி கிருஷ்ணர் கையில் கட்டிய நிகழ்வே ரக்ஷாபந்தன் விழாவாக கொண்டாடப்படுகிறது.
அது மட்டுமில்லாமல் மற்றொரு வரலாற்று சம்பவம் ரக்ஷாபந்தன் கொண்டாடுவதற்கு பின்னால் இருக்கிறது. அது என்னவென்றால் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சித்தூர் நாட்டை கர்ணாவதி என்ற ராணி ஆட்சி புரிந்து வந்தார். குஜராத்தை ஆண்ட சுல்தான் பகதூர்ஷா சித்தூர் நாட்டை கைப்பற்ற அந்த நாட்டின் மீது போர் தொடுத்தார். இதை கேள்விப்பட்ட ராணி முகலாய பேரரசர் ஹுமாயின் அவர்களுக்கு ராக்கி என்னும் புனித கயிற்றை போருக்கு செல்வதற்கு முன் கட்டி கொள்ளுமாறு அனுப்பி வைத்தார். பாச உணர்ச்சி கொண்ட ஹுமாயுன் ராணியையும் அவரது ராஜ்ஜியத்தையும் காப்பாற்ற சென்றார். அதனால் ரக்ஷாபந்தன் கொண்டாடப்படுவதாகவும் கூறப்படுகிறது.
அண்ணன் தங்கை சகோதரத்துவத்தை முதன்மையாக எடுத்துக்காட்டும் இந்த ரக்ஷாபந்தன் இந்துக்களால் கொண்டாடப்படும் பண்டிகையை விட இது ஒரு சமுதாய பண்டிகையாகவே கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.